dinakaran criticize palanisamy and panneerselvam
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்தப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இனிமேல் ஜெயலலிதாவின் ஆட்சி என்று கூறமுடியாது என தினகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 9-ம் தேதி முதல் 6 நாட்களுக்கு சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் நிறுவனங்களிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கின.


இந்த சோதனையின்போது, 2 லேப்டாப்கள் மற்றும் 2 பென் டிரைவ்களை வருமான வரித்துறையினர் எடுத்து சென்றதாக விவேக் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கு கடும் கண்டனத்தை டுவிட்டரில் தினகரன் பதிவிட்டிருந்தார். ஆட்சியையும் பதவியையும் காப்பாற்ற பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இன்னும் எத்தனை துரோகங்கள் செய்யக் காத்திருக்கிறார்களோ? எனவும் ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகத்தின் பின்னணியில் இருக்கும் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அதிமுகவின் தொண்டர்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடத்துவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இனிமேல் ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்துவதாகக் கூறக்கூடாது என தெரிவித்தார்.
வருமான வரி சோதனை நடத்தப்படுவதால் குற்றவாளி என்று கூறிவிட முடியாது. ஜெயலலிதாவின் வீட்டில் நடத்தப்படும் சோதனையில் அரசியல் சதி இருக்கிறது. அன்புநாதன், சேகர் ரெட்டி வீடுகளில் கைப்பற்றப்பட்ட டைரியில் குறிப்பிடப்பட்டவர்களின் வீட்டில்தான் சோதனை நடத்த வேண்டும். சேகர் ரெட்டியில் வீட்டில் இருந்ததைப்போல தங்க குவியலோ வைரகுவியலோ போயஸ் கார்டன் வீட்டில் இல்லை.
பாழாகிப்போன 2 லேப்டாப்புகளை மட்டுமே வருமான வரித்துறையினர் எடுத்து சென்றுள்ளனர். ஜெயலலிதாவின் சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரம் உள்ளதாக எங்கள் உறவினர் ஒருவர் கூறியதால் அதை நான் ஒப்புக்கொண்டேன். ஆனால் அதை எடுப்பதற்காகத்தான் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கருதவில்லை என தினகரன் தெரிவித்தார்.
