பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தப்போவதாக புறப்பட்ட டி.டி.வி தினகரன் அங்கு சென்று செய்தியாளர் சந்திப்பின் போது திட்டத்திற்கு ஆதரவாக பேசியதால் குழப்பம் ஏற்பட்டது.

பசுமை வழிச்சாலை திட்டத்தை பொதுமக்களின் கருத்துகளை கேட்டு பின் நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருவண்ணாமலையில் போராட்டம் அறிவித்திருந்தது. இதற்காக திருவண்ணாமலை சென்ற டி.டி.வி அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வளர்ச்சி திட்டங்களை நாங்கள் எதிர்க்கவில்லை என்றார். மேலும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை சந்தித்து விளக்கம் கொடுக்க வேண்டும் என்று டி.டி.வி பேசினார்.

இதனால் குழப்பம் அடைந்த செய்தியாளர்கள், சார் நீங்கள் பசுமை வழிச்சாலை திட்டம் வேணும் என்கிறீர்களா? வேண்டாம் என்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மக்கள் கேட்காமலயே எதற்காக பசுமை வழிச்சாலை திட்டம் என்று தான் நாங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கிறோம். சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான சாலையை ஏன் எட்டு வழிச்சாலையாக்க கூடாது என்றும் தினகரன் தெரிவித்தார்.

இல்லை சார், நீங்கள் மக்கள் கருத்தை அறிந்து பின்னர் பசுமை வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தானே ஆர்பாட்டம் நடத்த வந்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள். அதற்கு மக்கள் தான் பசுமை வழிச்சாலை திட்டமே வேண்டாம் என்கிறார்களே என்று பதில் அளித்தார் டி.டி.வி. சார், அப்படி என்றால் பசுமை வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று  போராட்டம் நடத்துகிறீர்களா என்று மீண்டும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இல்லை, இல்லை நாங்கள் மக்கள் கருத்தை எடப்பாடி பழனிசாமி கேட்க வேண்டும் என்று தான் வலியுறுத்துகிறோம் என்று டி.டி.வி கூறினார். இதனால் பாதி செய்தியாளர்களுக்கு தலை சுற்றிபோய்விட்டது. வடிவேலு – சங்கிலி முருகன் காமெடியை போல், டி.டி.வி திரும்ப திரும்ப அதையே பேசுகிறார் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அடுத்த கேள்விக்கு சென்றுவிட்டனர். இது குறித்து விசாரித்த போது, பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்கள் கருத்த கேட்க வேண்டும் என்று ஆர்பாட்டம் நடத்ததே டி.டி.வி கட்சியினர் அனுமதி வாங்கியுள்ளனர்.

எனவே செய்தியாளர் சந்திப்பின் போது பசுமை வழிச்சாலை திட்டத்தை  ரத்து செய்ய வேண்டும் என்று கூறினால் ஆர்பாட்டத்திற்கு கொடுத்த அனுமதி ரத்தாகிவிடும் என்கிற பயத்தில் டி.டி.வி அப்படி பேசியதாக அவர்கள் கட்சிக்காரர்கள் விளக்கம் கொடுத்தனர்.