Dinakaran angry over AIADMK Businessman after spend more money at RK Nagar For Madhusoodhanan
ஆர்.கே.நகர் இடை தேர்தலில் தினகரன் தரப்பில், பெருமளவு பணம் வாரி இறைக்கப் படுவதாக எதிர்க்கட்சிகள் இதுவரை குற்றம் சாட்டி வந்தன.
ஆனால், தினகரனுக்கு நிகராக, தொழிலதிபர்கள் சிலர் மதுசூதனனுக்கும் பணத்தை வாரி இறைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக ஆட்சி காலத்தில், சசிகலாவால் அரசியல் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பலர் பாதிக்கப்பட்டனர். சிலர் அவமானப்படுத்த பட்டனர்.
அவ்வாறு பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஒருவர், தினகரனுக்கு எதிராகவும், மதுசூதனனுக்கு ஆதரவாகவும், தொகுதியில் பணத்தை வாரி இறைப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, பணத்தை இறக்குவதற்கு பன்னீர் தரப்பு பயந்து சாகிறது என்று தினகரன் தரப்பில் கிண்டலாக பேசப்பட்டது.
பணம் என்று யாராவது சொன்னால், பன்னீரோ நத்தம் விஸ்வநாதனை கை காட்டுகிறார். நத்தம் விஸ்வநாதனோ, பாண்டியராஜனை கை காட்டுகிறார் ஆனால் யாரும் பணத்தை வெளியே எடுப்பதில்லை என்றெல்லாம் கேலி செய்தது தினகரன் அணி.
அதனால், ஆரம்பத்தில், பண விஷயத்தில் சுணக்கம் காட்டிய பன்னீர் தரப்பு, தொழிலதிபர்கள் சிலர் கைகொடுத்துள்ளதால், தற்போது மிகவும் உற்சாகம் அடைந்துள்ளது.
நீங்கள் தொகுதி முழுவதும் சுற்றி வாருங்கள், தொகுதி முழுக்க கவனிக்க வேண்டியதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்ன அந்த தொழில் அதிபர், அந்த வேலையை தெளிவாக செய்து வருகிறாராம்.
இதனால், கொதித்துப்போன தினகரன், தேர்தல் முடிந்ததும், அவரை ஒரு கை பார்க்கிறேன் என்று சவால் விட்டு வருகிறாராம்.
