கர்நாடகாவில் பைக் வைத்துள்ளவர்களுக்கு செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. அரசியல்வாதிகளுடன் ஒட்டு கேட்க, பைக் ஊர்வலத்தில் பங்கேற்க ஆள் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.  இதில் கலந்து கொள்வோருக்கு, 2 லிட்டர் பெட்ரோலும், சரக்கு,  பிரியாணி மற்றும் 500 ரூபாய் வரை கொடுக்கின்றனர்.

கர்நாடகாவில், 28 இடங்களுக்கு, வரும் 18 மற்றும், 23ல், லோக்சபா தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ், பிஜேபி மஜத உள்ளிட்ட கட்சிகள், வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கும் முன்பே பிரசாரத்தை துவக்கிவிட்டன.

கர்நாடகாவில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில், மற்றும் வேட்பாளர்கள் ஒட்டு கேட்க செல்லும்போதும் வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர் பட்டாளத்தை காண்பிக்க கட்சிகள், சில யுக்திகளை பின்பற்றுகின்றன. தங்களின் சொந்த பைக்கில் வருபவருக்கு, பணம், பிரியாணி, பெட்ரோல் போடுவதுடன், அவர்களை அழைத்து வருபவர்களுக்கும், தலா 400 ரூபாய் முதல் 500 கொடுக்கின்றனர்.

இதுபோக, வெயிலில் அலையும்போது தாகம் எடுக்கும் என்பதால், பிராண்டட் வாட்டர் பாட்டில், ஐஸ் மோர், கரும்பு ஜூஸ், லெமன் சோடாஎன, செமையாக கவனிக்கின்றனர். பைக்கில் வந்து, பணம், பிரியாணியை வாங்கி விட்டு ஓடி விடக் கூடாது என்பதற்காக, பைக் பிரச்சாரத்திற்கு வருபவர்களை கண்காணிக்க, தனி டீம் உண்டு. ம்முதல்நாள் முடிந்ததும் மறுநாள் எந்த இடத்தில்,எந்த கூட்டத்திற்கு, எந்த கட்சிக்கு வர வேண்டும் என முதல் நாளே வாட்ஸ் ஆப்பில் தகவலும் தெரிவிக்கப்படுகிறது.

நிரந்தர வேலை இல்லாமல், ஊர் சுற்றி வந்தவர்களுக்கு, இப்போது வேலை கிடைத்துள்ளது என இளைஞர்கள் மகிழ்ச்சியுடன்  குவிகின்றனர்.