யார் பெண்குலத்தையும், தாயையும் இழிவாகப் பேசினாலும், அவர்களுக்கு ஆண்டவன் நிச்சயமாக அவர்களுக்குரிய தண்டனையை வழங்குவார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டபோது, தனது தாயைப் பற்றி, ஆ.ராசா இழிவாக பேசியதை எண்ணி கண்கலங்கினார்.

இது குறித்து பேசிய அவர், ‘’நான் முதலமைச்சராக இருந்து பேசவில்லை. உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து சொல்லுகின்றேன். இந்த தமிழ் மண்ணில் பிறந்த எவரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. எனவே, அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 
சிந்தித்துப் பாருங்கள், நான் முதலமைச்சராக இருக்கின்றேன். நான் இதைப் பற்றி பேசக் கூடாது என்று தான் வந்தேன். இந்த தாய்மார்களைப் பார்த்ததால் பேசுகின்றேன். என் தாய் என்று பார்க்காதீர்கள். உங்கள் குடும்பத்தில் ஒரு தாயாகப் பாருங்கள்.எவ்வளவு கீழ்த்தரமாக பார்க்கின்றார். ஒரு சாதாரண மனிதன் முதலமைச்சராக இருந்தால் என்னவெல்லாம் பேசுவார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். ஒரு முதலமைச்சருக்கே இப்படிப்பட்ட நிலைமை என்றால், உங்களைப்போன்ற மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்கள். இவர்கள் எல்லாம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், இந்தப் பெண்கள் மற்றும் தாய்மார்களின் நிலைமை என்ன ஆகும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.தயவு செய்து, அருள்கூர்ந்து எனக்காக நான் பேசவில்லை. 
அவர்களுக்கெல்லாம் தக்க தண்டனையை நீங்கள் வழங்க வேண்டும். என்னுடைய தாய் கிராமத்திலேயே பிறந்து, வளர்ந்தவர். விவசாயி, இரவு, பகல் பாராமல் பாடுபட்டவர். அவர் இறந்து விட்டார். அவரைப் பற்றி இழிவாக தரக்குறைவாக எப்படி எல்லாம் பேசி இருக்கிறார்.ஒரு முதலமைச்சருக்கே இந்த நிலைமை. நான் நினைத்தால் சாதிக்க முடியும். ஆனால், நான் அப்படி அல்ல. ஒரு சாதாரண குடும்பத்தில் உங்களைப் போல பிறந்து வளர்ந்தவன். ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் தாய் தான் உயர்ந்த ஸ்தானம். யார் பெண்குலத்தையும், தாயையும் இழிவாகப் பேசினாலும், அவர்களுக்கு ஆண்டவன் நிச்சயமாக அவர்களுக்குரிய தண்டனையை வழங்குவார். இதைக்கூட பேசக்கூடாது என்று நினைத்தேன். இந்த தாய்மார்கள் இருந்தார்கள்.
அதனால் தான் பேசினேன். இப்படிப்பட்டவர்களெல்லாம் ஆட்சிக்கு வந்துவிட்டால், இவர்கள் எல்லாம் எப்படி அராஜகம் செய்வார்கள். எப்படி பெண்களை இழிவு படுத்துவார்கள் என்பதை மட்டும் தயவு செய்து, அருள்கூர்ந்து இங்குவந்துள்ள தாய்மார்களும், சகோதரிகளும் எண்ணிப் பார்க்க வேண்டும்’’என்று அவர் கேட்டுக் கொண்டார்.
