இலங்கையை கலக்கி வந்த பிரபல சிங்கள தாதா உயிருடன் இருக்கிறாரா? என்கிற சந்தேகம் சிபிசிஐடி போலீசாருக்கு வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இதன் அடிப்படையில் போலீசார் தங்களின் விசாரணையின் கோணத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையைச் சேர்ந்தவர் பிரபல சிங்கள தாதா போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொடா லொக்கா. இவர் மீது கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இலங்கை போலீஸாரால் தொடர்ந்து தேடப்பட்டு வந்தார். இலங்கை போலீஸ் பிடியில் தப்பிக்க,   தமிழகத்துக்கு தப்பிய அங்கொடா லொக்கா  கோவை பீளமேடு பகுதியில் பிரதீப்சிங் என்ற பெயரில் பதுங்கி இருந்தார். ஜூலை 3-ம் தேதி  அவர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின், அவரது உடல் மதுரைக்கு கொண்டு வந்து தத்தனேரி மின் மயமானத்தில் தகனம் செய்யப்பட்டது. சிபிசிஐடி போலீஸ் விசாரணையில், அவர் போலி ஆவணங்களின் அடிப்படையில் கோவையில் தங்கியிருந்தது தெரியவந்தது.  இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த அவரது காதலி அமானி தான்ஜி, மதுரை ஆனையூர் பகுதியில் வசித்த  பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி,  ஈரோடு தியானேசுவரன் ஆகியோரை கோவை போலீஸார் கைது செய்தனர். சிம்கார்டு, லேப்-டாப்  உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்தனர்.  மலேசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் கேட்டுக் கொண்டதன் பேரில் மதுரையில் அங்கடோ லக்காவுக்கு சிவகாமி சுந்தரி, அவரது பெற்றோர் தினகரன். பாண்டியம்மாள்  அடைக்கலம் கொடுத்து தங்க வைத்ததும், இவர்கள் மூலமே அங்கட லக்காவுக்கு  ஆதார் கார்டு உள்ளிட்ட போலி ஆதார் கார்டு போன்ற ஆவணங்கள் ஏற்பாடு செய்த தகவலும் வெளியாகின. 

  
 இலங்கை தமிழகம் இடையே சர்ச்சை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக  சிபிசிஐடி ஐஜி சங்கர் தலைமையில்  7 தனிப்படைகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். டிஎஸ்பி முத்துசாமி தலைமையில் சிபிசிஐடி குழு மதுரையில் முகாமிட்டு விசாரிக்கின்றனர். மதுரை  ஆனையூர் பகுதியில் ரயிலார் நகரிலுள்ள பூட்டியிருந்த  சிவகாமி சுந்தரியின் வீடு, வழக்கறிஞர் அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். அங்கு வங்கி புத்தகம், பாஸ்போர்ட், இலங்கை நாட்டு ரூபாய் நோட்டுக்கள் உள்ளிட்ட  முக்கிய  ஆவணங்களை கைப்பற்றியதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.


 கடந்த 2 ஆண்டில்  மட்டுமே சிவகாமி சுந்தரி  ஆனையூர், ரயிலார் நகர் பகுதியில் 5 வீடுகளை வீடுகளை வாடகை பிடித்து தங்கியது தெரியவந்தது. இது குறித்து வீட்டு  உரிமையாளர்கள்  நாகராஜ், யோகேசுவரன் உட்பட 5 பேர் மற்றும் தினகரன், அவரது மனைவி பாண்டியம்மாள், இவர்களது மகன் அசோக்குமார், சிவகாமி சுந்தரியின் கணவர் பிரதாப் உள்ளிட்டோரிடம் மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து டிஎஸ்பி முத்துச்சாமி தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர். 


மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கையை சேர்ந்த அங்கொடா லொக்கா, தன்னை யாரும் அடையாளம் கண்டு பிடிக்காமல்  இருக்க, தன் பேரை மட்டும் மாற்றிக் கொள்ளவில்லை,உருவத்தையும் மாற்றிக் கொண்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.இலங்கையில் இருந்து தப்பி 2 ஆண்டுகளாக, பிரதீப் சிங் என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, கோயம்புத்தூரில் தங்கி வந்தார். அவர் கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி மர்மமான உயிரிழந்ததாக சொல்லப்படும் நிலையில் அவரது மரணத்தில் பல விதமான சந்தேகங்கள் எழும்பியதால், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீஸார், பல திடுக்கிடும் தகவல்களை வெளியாகி இருக்கிறது.

 இலங்கையில், கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் என  பல விதமான குற்ற செயல்களில் ஈடுபட்ட அங்கொட லொக்கா, தனது அடையாளத்தை மறைக்க, மருத்துவர்களை அணுகி, தான் படங்களில் நடிக்க விரும்புவதால், தனது மூக்கை திருத்திக் கொள்ள ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். இதை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி, கோயம்புத்தூரில் ஆர்.எஸ் புரத்தில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அவருக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.அதன்பிறகு பிப்ரவரி 22ம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

தனது முக அமைப்பை மாற்றிக் கொண்டு, அடையாளத்தை மறைத்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்லும் திட்டம் இருந்ததாக போலீஸார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.நாம் பொதுவாக சினிமாவில் தான் இது போன்ற சம்பவங்களை பார்த்திருப்போம். ஆனால், அவருடைய வரலாற்றை கிளறினால், சினிமா காட்சியை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு, பல பல திருப்பங்கள் நிறைந்த  கதையாக இருக்கிறது.மேலும் அங்கொடா லொக்கா, சேரன்மா நகரில் உள்ள  ராயல் ஃபிட்னஸ் க்ளப் என்ற ஜிம்மிற்கு மாலையில் செல்லும் வழக்கம் இருந்ததாகவும், ஆனால், அவர் இன்ஸ்ட்ரக்டரை தவிர யாரிடமும் பேசியதில்லை எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

மதுரை திருச்சி சென்னை ஆகிய விமான நிலையங்களில்  அங்கொடா பிளாஸ்டிக் சர்ஜரி செய்தால் எப்படி இருப்பான் என்கிற பல்வேறு கோண புகைப்படங்களை வைத்து போலீசர் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.