கொஞ்சம் விட்டால் அண்ணாவுக்கே ஆலோசனை கூறினேன் என்றி சசிகலா சொல்வார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்வதாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு அறிவித்தார் சசிகலா. தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்த பிறகு அவருடைய அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. சசிகலா தினந்தோறும் அமமுக, அதிமுக தொண்டர்களிடம் பேசும் ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனால், அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவருடன் சசிகலா பேசிய ஆடியோ இன்று வெளியானது.
 அந்த ஆடியோவில், “மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு ஆலோசனை சொன்னேன். அவருடனேயே பயணித்தவள் நான். ஜெயலலிதா அரசியலை விட்டு செல்வதாக சொன்னபோதும் நான்தான் அறிவுரை கூறி, அவரை அரசியலில் நீடிக்க வைத்தேன்.” என்று சசிகலா தெரிவித்திருந்தார். இந்த ஆடியோ குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “காதில் பூ சுத்துகிற வேலையை சசிகலா செய்கிறார். கொஞ்சம் விட்டால் அண்ணாவுக்கே ஆலோசனை கூறினேன் என்பார்” என விமர்சனம் செய்துள்ளார்.