பிற கட்சிகளில் எந்தக் கூட்டணியில் சேரப்போகிறது எனக் கணிக்க முயன்றாலும் பாமகவை மட்டும் எந்த திசையில் பயணிக்கப்போகிறது என்பதை கூட்டணியை உறுதி செய்யும் வரை கணிக்க முடியவேயில்லை.

 

ஆரம்பத்தில் அதிமுக கூட்டணியில் மக்களவை தேர்தலில் பாமக கூட்டணி அமைக்கும் என பேச்சுகள் கிளம்பியது. இடையே திமுக கூட்டணிக்கு பாமக முயன்று வருவதாகவும் அதனை ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனாலும், தனது மாமனாரான முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மூலம் ராகுல் காந்தியிடம் அழுத்தம் கொடுத்து அங்கிருந்து சபரீசன் மூலம் பாமகவை கூட்டணியில் சேர்க்க ஏற்பாடுகள் நடந்து வந்தன. 

ஒரு வழியாக பாமகவை கூட்டணியில் சேர்க்க திமுகவும் இரங்கி வந்தது. அதிமுகவுடன் கூட்டணியை இறுதி செய்யும் வரை திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர் பாமகவினர். இதனை வெளிப்படுத்தும் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான வசந்தகுமாரும் இன்று காலை வரை பாமக, திமுக கூட்டணியில் இடம்பெறும் எனக் கூறி வந்தார்.

திமுக 6 சீட்டுக்களை மட்டுமே ஒதுக்க முன் வந்ததாக கூறப்படுகிறது. அதனை ஏற்றுக் கொண்ட பாமக கூடுதலாக ராஜ்யசபாவில் ஒரு சீட்டை ஒதுக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு உறுதியாக வாய்ப்பில்லை என திமுக கையை விரித்த பிறகே பாமக அதிமுகவை மீண்டும் நாடிச் சென்றது. அதன்பிறகே அதிமுக கூட்டணியில் மக்களவையில் 7 தொகுதி, ராஜ்யசபா ஒரு சீட் என முடிவுக்கு வந்தது பாமக. ஆக ராஜ்ய சபா சீட்டை மட்டும் பாமகவுக்கு திமுக ஒதுக்கியிருந்தால், அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருக்க வாய்ப்பே இல்லை எனக் கூறப்படுகிறது.