வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த் 8 ஆயிரத்து சொச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுவிட்டார்.

வேலூரில் தன் மகனுக்கு சீட் வாங்கியது போராட்டம், பின் தேர்தலில் பிரச்சாரம் செய்தது ஒரு போராட்டம், தேர்தல் ரத்து செய்யப்பட்ட பின் மீண்டும் கதிர் ஆனந்தையே வேட்பாளர் ஆக்கியது இன்னும் பெரிய போராட்டம், இதில் ஜெயித்தது போராட்டங்களின் உச்சம் என்று தன்னைப் பார்க்க வருகிறவர்களிடம் எல்லாம் சொல்லி வருகிறார் துரைமுருகன்.

‘கதிர் ஆனந்தை கஷ்டப்பட்டு எம்பி. ஆக்கியாச்சு.இனிமே கட்சி ரீதியா அவனை மேல கொண்டாரணும் என தனக்கு நெருக்கமான வேலூர் திமுகவினரிடம் பேசிய துரைமுருகன், அதேபோல உதயநிதி கூட இளைஞரணியில கதிர சேர்த்திடனும், அதோட விற்ற கூடாது மாநிலப் பொறுப்பு கிடைக்கும் போல தெரியுது. அதனால போஸ்டர்ல இனி என்னை விட கதிர் படத்தையே பெரிசா போடுங்கயா. இனிமே வேலூர் அரசியல்ல கதிர் தான் பெருசா தெரியணும் என்று அன்பு கட்டளை போட்டுள்ளார்.

வரும் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை கிண்டி 100 அடி சாலையில் உள்ள இல்டன் ஓட்டலில் இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர்கள், மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தை சென்னையில் நடத்துகிறார் உதயநிதி ஸ்டாலின்.

அவர் இளைஞரணி மாநில அமைப்பாளராக பொறுப்பேற்ற பின் விரிவான அளவில் நடக்கும் முதல் ஆலோசனைக் கூட்டம் இது. அந்தக் கூட்டத்துக்கு முன்பே கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் மாநில அளவில் பொறுப்பு கிடைக்கும் என்று உறுதியாக சொல்லிவருகிறார்கள் வேலூர் திமுகவினர்.