திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை நேற்றை விட  இன்று நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவலை அடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள் என கோபாலபுரம் இல்லத்திற்கு விரைந்து வருகின்றனர்.

நேற்று மாலை முதலே, கோபாலபுரம் இல்லத்திற்கு துரைமுருகன், அன்பழகன் முதல் இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரை ஒவ்வொரு தலைவராக கோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஆனால் மருதுவர்களின் அறிவுரை படி, இவர்கள் யாரையும், கருணாநிதியை பார்க்க அனுமதிக்க முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், திமுக செயல் தலைவரை சந்தித்து கலைஞரின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உடல் நலம் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் கலைஞரின் உடல் நலம் குறித்து பல்வேறு கருத்துக்கள் தொடர்ந்து பரவி வருவதால், வதந்திகளை நம்ப வேண்டாம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின்  தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் கருணாநிதியின் உடல்நிலை குறித்து வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேட்டியில் கூறியுள்ளார்.

அதில், சிரித்துக்கொண்டே வெளியில் வந்த அவர் நான் சிரித்துகொண்டே இருக்கிறேன். அதிலிருந்து தெரியவேண்டாமா? நேற்றைவிட இன்று நல்ல முன்னேற்றம் உள்ளது. நல்ல சமிக்ஞை செய்கிறார். நல்ல சேதி வரும். நலமுடன் உள்ளார் ஊடகத்தினர் அனைவரும் கலைந்து செல்லவும் என கூலாக சொல்லிவிட்டு நடையைக் கட்டினார்.