தி.மு.க.வின் தலைவரான பிறகு ஸ்டாலினுக்கு அரசியல் வைக்கும் முதல் அக்னிபரீட்சை ‘இரண்டு தொகுதி இடைத்தேர்தல்’தான். திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இரண்டு இடைத்தேர்தல்களும் நெருங்க நெருங்க ஸ்டாலினின் பல்ஸ் படபடக்க துவங்கியிருக்கிறது. 

இடைத்தேர்தல் தோல்வி என்பது எதிர்கட்சியை பொறுத்தவரையில் பெரியன் சரிவில்லை. தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்த போது நடந்த இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. சரித்திர சரிவை சந்தித்திருக்கிறது. 

ஆனால்!...இப்போது ஸ்டாலினுக்கு முன் நிற்க கூடிய சவால்கள் ஒன்றுதான். அது, தோற்றாலும் பரவாயில்லை தினகரனை விட அதிகமாக ஓட்டுகள் வாங்க வேண்டும் அதேபோல் ஒரு வேளை அழகிரி சுயேட்சையாக களமிறங்குவாரேயானால் அவரையும் வென்றாக வேண்டும் என்பதுதான். இது நடந்தால்தான் தி.மு.க.வுக்கு மரியாதை. ஆளுங்கட்சியிடம் தோற்றால் கூட ‘ஓட்டுப்பதிவில் ஒழுக்கமில்லாமல் நடந்து கொண்டார்கள்!’ என்று சொல்லி எஸ்கேப் ஆகிக் கொள்ளலாம் என்பதே. 

அதேவேளையில் ஸ்டாலின் ஆளுங்கட்சியிடம் ஜெயித்தாலும் பரவாயில்லை ஆனால் தங்களை விட வாக்குகள் குறைவாக வாங்க வேண்டும்! என்பதே தினகரனின் இலக்கு. அதற்கு ஏற்றார்போல்தான் காய் நகர்த்தி வருகிறார் அவர். 

இச்சூழலில், அழகிரி டீமின் எண்ணம் எப்படியிருக்கிறது? என்று பார்ப்போமேயானால்...சமீப காலமாக அனல் தெறிக்க அரசியல் பேச துவங்கியிருக்கும் அழகிரியின் மூத்த மகள்  கயல்விழி சொல்லும் கணக்கு வேற மாதிரி இருக்கிறது. அதாவது, அப்பாவை (அழகிரியை), சித்தப்பா (ஸ்டாலின்) அரவணைத்து கட்சியில் இணைத்துக் கொண்டால் இடைத்தேர்தல்களில் தி.மு.க. ஜெயிக்கும்! என்று ஒற்றை வரியில் ஒரு கதை சொல்லியிருக்கிறார். 

“தி.மு.க.வுக்கு எதிராக நிச்சயமாக எங்கள் அப்பா செயல்படமாட்டார். ஆனால் இடைத்தேர்தலுக்குள் எல்லா பிரச்னையும் சரியாகி, அப்பாவும் சித்தப்பாவும் ஒண்ணு சேரவேண்டும். அப்பாவை, கழகத்தினுள் சித்தப்பா இணைத்துக் கொள்ள வேண்டும். இது நடப்பது கழகத்துக்கு நல்லது. இப்படி நடந்தால் இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க. அமோகமான வெற்றியை அள்ளும். 

தென் தமிழ்நாட்டில் அப்பாவோட செல்வாக்கு அசைக்க முடியாததாகவும், மறுக்க முடியாததாகவும் இருக்குது. அப்பாவை ஒரு வலிமையான ஆயுதமா சித்தப்பா பயன்படுத்திக்கணும். அப்படி எங்க அப்பாவை கட்சியில் சேர்க்கலைன்னா தி.மு.க.வுக்கு அது பின்னடைவுதான். 

தாத்தாவும் அப்பாவை கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளும் நினைப்பில்தான் இருந்தார். கோபாலபுரம் இல்லத்தில் தாத்தாவை அப்பா சந்திச்சபோது ‘பொறுமையா இரு. சீக்கிரமே கட்சி வேலைகளை பார்க்கலாம்!’ன்னு சொல்லியிருந்தார். இன்னைக்கு அப்பா மீண்டும் கட்சிக்குள் நுழைய தடையா இருக்கிறவங்க, தாத்தாவின் ஆசையை நினைச்சுப் பார்க்கணும்.” என்றிருக்கிறார். 

அழகிரியின் மகள் கயல் இப்படி பேசிக் கொண்டிருக்க, மகன் தயாநிதியோ வழக்கமான வேட்டுகளுக்கெல்லாம் மேலே போய் ‘இடைத்தேர்தலுக்குள் அப்பாவை கட்சிக்குள் இணைக்காவிட்டால்...’ என்று சஸ்பென்ஸ் வைத்து சவால் விட்டிருக்கிறார். 

வெளியில் இருக்கும் எதிரிகளை விட வீட்டுக்குள் இருக்கும் பங்காளிகளை வெல்வதுதான் ஸ்டாலினுக்கு உண்மையான அக்னிபரீட்சை போல!