வேலூர் தேர்தலை புறக்கணித்த டிடிவியின் முடிவு தவறான முடிவு என்பது தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்த காரணத்தினால் தேர்தல் அரசியலில் இருந்து தற்காலிகமாக டிடிவி ஒதுங்கினார். வேலூர் தொகுதியில் முதலில் போட்டியிடுவோம் என்று அறிவித்த அவர் பின்னர் பின்வாங்கினார். இதற்கு காரணம் கடந்த முறையை போல் இந்த முறையும் மண்ணை கவ்வினால் தொடர்ந்து அரசியல் செய்ய முடியாது என்கிற பயம் தான். இதனை அடுத்து வேலூரை பற்றி கவலைப்படாமல் மாவட்ட அளவில் கட்சியை பலப்படுத்தும் வேலையில் அவர் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் வேலூர் தேர்தலில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் வெறும் எட்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக வென்றது. இந்த வாக்குகளும் கூட முஸ்லீம்கள் இருக்கும் பகுதியில் இருந்து திமுகவிற்கு கிடைத்தது. மேலும் அதிமுகவின் வாக்கு வங்கி எவ்வித பாதிப்பும் இல்லாமல் இரட்டை இலைக்கு கிடைத்த காரணத்தினால் திமுகவின் வாக்கு வித்தியாசம் அதிகரிக்காமல் போய்விட்டது.

ஒருவேலை டிடிவி தினகரன் வேட்பாளரை நிறுத்தியிருந்து தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக மேற்கொண்டிருந்தால் நிச்சயமாக கணிசமான வாக்குகளை பெற வாய்ப்பிருந்திருக்கும். குறிப்பாக அதிமுகவில் அதிருப்தியில் உள்ளவர்களின் வாக்குகளை தினகரன் வேட்பாளர் பெற முடிந்திருக்கும். இதன மூலம் அதிமுகவின் வாக்கு வங்கியில் கணிசமான வாக்குகள் குறைந்திருந்தாலும் கூட திமுக – அதிமுக இடையிலான வாக்குகள் வித்தியாசம் அதிகரித்திருக்கும்.

மேலும் திமுகவின் வெற்றி எளிதாகியிருக்கும். அத்துடன் அதிமுக தோல்விக்கு தான் காரணம் என்று தினகரன் பிரச்சாரம் செய்திருக்க முடியும். இதனால் ஓரளவு தனது அரசியல் எதிர்காலத்தை தினகரன் புதுப்பித்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். வழக்கம் போல் இந்த முறையும் தினகரன் எடுத்த தவறான முடிவு அவரது அரசியல் வாழ்வில் ஒரு நல்ல வாய்ப்பை வீணாக்கியுள்ளது.