திமுகவுடன் தொடர்பில் இருக்கும் 2 பாஜக MLA-க்கள்.. தூக்கிடலாமா ? பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக எம்.பி !
நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவராகவும், திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவரது மகன் சூர்யா சிவா.நேற்று சூர்யா சிவா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
கட்சியில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையையும் அவர் பெற்றுக் கொண்டார். பாஜகவில் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்த சூர்யா, 'திமுக ஒரு குடும்பத்தில் பிடியில் சிக்கியுள்ள நிலையில், ஒரு சிலருக்கு மட்டுமே பொறுப்பு வழங்கப்படுகிறது. கட்சியில் 15 ஆண்டுகளாக உழைக்கும் எனக்கு எவ்வித பொறுப்பும் வழங்கவில்லை. நான் கனிமொழி ஆதரவாளர் என்பதால் புறக்கணிக்கப்படுகிறேன்.
அதோடு சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்டதால் என்னையும் எனது மனைவியையும் தந்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்று கூறினார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட தருமபுரி எம்.பி செந்தில்குமார், 'திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக உங்களுக்கு ஒரு தகவல். உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எம்.பி செந்தில்குமாரின் இந்த பதிவால் பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது வானதி சீனிவாசன், சரஸ்வதி, நயினார் நாகேந்திரன், காந்தி ஆகிய 4 பேர் மட்டுமே பாஜக எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். இந்த 4 பேரில் யாரைக் குறிப்பிட்டார் எம்.பி செந்தில்குமார் என்று நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.