ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பின் திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அறங்காவலர் குழு கலைக்கப்பட்டு ஒய்.வி சுப்பாரெட்டி புதிய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 

விரைவில் புதிய அறங்காவலர் குழுவை அமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. 
தேவஸ்தானத்தின் திருமலை பிரிவு செயல் இணை அதிகாரியாக கடந்த 9 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த சீனிவாச ராஜு கடந்த வாரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

அந்தப் பொறுப்புக்கு திறமையான, அனுபவமுள்ள ஒருவரை நியமிக்க ஆந்திர அரசு முடிவு செய்தது. மறைந்த முன்னாள் ஆந்திர முதலமைச்சர்  ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆட்சிக்காலத்தில் இப்பொறுப்பை வகித்த தர்மா ரெட்டி சிறப்பாகப் பணியாற்றினார். 

அவரது பணிக்காலத்தில், தேவஸ்தானம் தொடர்பாக சர்ச்சை ஏதும் ஏற்படாமல் நிர்வாகம் திறமையாக நடத்தப்பட்டது. 

எனவே மீண்டும் தர்மா ரெட்டியை தேவஸ்தான செயல் இணை அதிகாரியாக நியமிக்க ஆந்திர அரசு முடிவு செய்தது. தர்மா ரெட்டி  மத்திய உள்துறையில் இணைச் செயலராக அவர் பணியாற்றி வந்தார். அவரை மாநில அரசுப் பணிக்கு மாற்றுமாறு ஆந்திர அரசு, மத்திய அரசிடம் கோரியது. 

அதை ஏற்ற மத்திய அரசு அவரை ஆந்திர அரசுப் பணிக்கு மாற்றி திங்கள்கிழமை இரவு உத்தரவு பிறப்பித்தது. தர்மா ரெட்டி விரைவில் தேவஸ்தான செயல் இணை அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இவர் முதலமைச்சர் ஜெகன் மோகனின் சின்ன மாமனார் என்றும் அவர் அவர் கிறிஸ்தவர் என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.