காவிரி விவகாரத்தில் தமிழக எம்பிக்களின் போராட்டத்தால் கர்நாடகாவில் யாரும் பதற்றமடைய வேண்டாம் என முன்னாள் பிரதமர் தேவ கௌடா கருத்து தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு நேற்றுடன் முடிந்தது. ஆனால், வாரியம் அமைக்கப்படவில்லை. அதனால் தமிழக விவசாயிகளும் மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே செயல்படுத்த மறுத்துவிட்டது மத்திய அரசு. 

மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து அதிமுக எம்பிக்கள் முடக்கிவிட்டனர். எந்தவிதமான அலுவல்களும் நடக்காத அளவிற்கு நாடாளுமன்றத்தை அதிமுக எம்பிக்கள் முடக்கினர்.

நாடாளுமன்ற வளாகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்திற்கும் மேலாக, வாரியம் அமைக்கப்படவில்லை என்றால், அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்துகொள்வோம் என எம்பி நவநீத கிருஷ்ணன், மாநிலங்களவையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநிலம் ஹாசனில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பிரதமரும் ஜேடிஎஸ் கட்சி தலைவருமான தேவ கௌடா, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தும் கூட, வாரியம் அமைக்க வலியுறுத்தி தீவிர போராட்டங்கள் நடத்துவது என தமிழக நண்பர்கள் முடிவு செய்துவிட்டனர்.

காவிரி விவகாரத்தில் தற்கொலை செய்துகொள்வதாக எம்பி ஒருவர் மாநிலங்களவையில் மிரட்டல் விடுத்துள்ளார். எந்த மாநிலத்தவராக இருந்தாலும் இதுபோன்ற மிரட்டல் விடுவது முறையானது அல்ல. எந்த பிரச்னையாக இருந்தாலும் பேசித்தான் தீர்க்க வேண்டும். தமிழக எம்பிக்களின் போராட்டத்தால் கர்நாடகாவில் யாரும் பதற்றமோ உத்வேகமோ அடைய வேண்டாம். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன் என தேவ கௌடா தெரிவித்துள்ளார்.