நீட் தேர்வை தமிழக அரசு ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது என்றும், நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைத்து உச்சநீதிமன்றம் சென்று போராட உள்ளதாகவும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்  என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் நீட் தேர்விக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, மருத்துவப் படிப்பு படிக்க முடியாமல் விரக்தியில் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி அனிதாவின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மாணவி அனிதாவின் மரணம் தன்னை மிகவும் பாதித்துள்ளதாக தெரிவித்தார்.

நீட் தேர்வை தமிழக அரசு ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது என்றும், நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைத்து உச்சநீதிமன்றம் சென்று போராட உள்ளதாகவும் தம்பிதுரை கூறினார்.