சாதாண மாநில கட்சியான அ.தி.மு.க.வை இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி எனும் ரேஞ்சுக்கு உயர்த்திப் பிடித்த அசாதாணமான ஆளுமைதான் ஜெயலலிதா. அ.தி.மு.க. எனும் அடையாள அட்டையை சுமந்து கொண்டு அதிகார மையங்களாகவும், பெரும் செல்வந்தர்களாகவும் இன்று வலம் வரும் அக்கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கான  ஆண்களை வாழ வைத்த பெண் தெய்வம் அவர்! 

இன்று ஜெயலலிதாவின் இரண்டாமாண்டு நினைவு நாள். அ.தி.மு.க.வின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முதல் கடைசி தொண்டன் வரை அத்தனை பேருக்கும் வேதனை நிறைந்த நாள் இன்று. அவர்கள் துள்ளதுடிக்க அவர்களின் பெண் தெய்வம் பிரிந்து சென்ற நாளல்லவா! 

இந்த நாளில் மற்றவர்கள் வேதனையில் துடிக்க, நாடாளுமன்ற துணை சபாநாயகரும், கரூர் எம்.பி.யும், அ.தி.மு.க.வின் சீனியர் மோஸ்ட் தலைவருமான தம்பிதுரையோ வலியிலும் சேர்ந்து துடித்திருக்கிறார். ஆம்! நெஞ்சு வலியின் காரணமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தம்பிதுரை. 

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா என்று அக்கழகத்தின் மூன்று முக்கிய ஆளுமைகளுடனும் அரசியல் செய்த கெத்துடனும், இன்று அதன் தலைமை பீடத்திலிருக்கும் எடப்பாடியார் மற்றும் ஓ.பி.எஸ். இருவருடனும் இணைந்து அரசியல் செய்தபடி, இன்றைய அ.தி.மு.க.வின் வழிகாட்டி என்று விமர்சிக்கப்படும் பி.ஜே.பி.யை அவ்வப்போது போட்டுப் பொளந்து அரசியல் அதகளம் செய்து வந்த தம்பிதுரைக்கு இந்த திடீர் சுகவீனம். 

தொண்டர்களை அலட்சியம் செய்கிறார், தொகுதி மக்களின் பிரச்னைகளை மதிப்பதில்லை, அமைச்சர்களை கண்டு கொள்வதில்லை, கழக தலைமைக்கு கட்டுப்படுவதில்லை என்ரு ஆயிரம் விமர்சனங்களை சந்தித்த மனிதர். திடீரென இப்படி சுருண்டு படுத்தது சஞ்சலத்தை தருகிறது அக்கட்சியினருக்கு. விரைவில் தம்பி மீளட்டும், வழக்கம்போல் துரைத்தனமான அரசியலை தொடரட்டும்!