சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர், அதிமுக கொறடா ஆகியோரை தேர்வு செய்யவே எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று மிகவும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எம்எல்ஏக்களுக்கான அடையாள அட்டையுடன் வந்தவர்களை மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்தனர்.
எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியை பெற முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி ஓபிஎஸ்சுடன் நேரடியாக மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் பரபரப்பிற்கும் விறுவிறுப்பிற்கும் சிறிதும் பஞ்சம் இன்றி முடிந்துள்ளது. சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர், அதிமுக கொறடா ஆகியோரை தேர்வு செய்யவே எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று மிகவும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எம்எல்ஏக்களுக்கான அடையாள அட்டையுடன் வந்தவர்களை மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்தனர். கூட்டம் காலை பதினொரு மணிக்கு என்று கூறப்பட்டிருந்தாலும் பத்து மணிக்கே மூத்த எம்எல்ஏக்கள் வேலுமணி, தங்கமணி, வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் கட்சி ஆபிஸ் வந்திருந்தனர்.

எதிர்கட்சி துணைத் தலைவராக தான் விரும்பவில்லை எனவும், எனவே அந்த பதவியை தனது ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கு வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் பேசியதாக சொல்கிறார்கள். ஆனால் இதனை ஏற்க பெரும்பாலான எம்எல்ஏக்கள் மறுத்துவிட்டனர். சீனியாரிட்டி அடிப்படையில் தான் பதவிகளை கொடுக்க வேண்டும். எனவே ஒன்று நீங்கள் துணைத் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் இல்லை என்றால் கட்சியில் உங்களுக்கு அடுத்த சீனியருககு அந்த பதவியை கொடுக்க வேண்டும் என்று எம்எல்ஏக்களில் பெரும்பாலானவர்கள் ஓபிஎஸ்சிடம் கூறியுள்ளனர். ஆனால் மனோஜ் பாண்டியனைத்தான் எதிர்கட்சி துணைத் தலைவராக்க வேண்டும் என்று ஓபிஎஸ் பிடிவாதம் காட்டியுள்ளார்.

அப்படி என்றால் எனக்கு எதிர்கட்சி துணைத் தலைவர் பதவி வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி நேரடியாக களத்திற்கு வந்ததாக சொல்கிறார்கள்.இதனை சற்றும் எதிர்பார்க்காத ஓபிஎஸ், என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறியதாக கூறுகிறார்கள். மனோஜ் பாண்டியனா? எஸ்.பி.வேலுமணியான என எம்எல்ஏக்களே தீர்மானிக்கட்டும் என்கிற ரீதியில் ஓபிஎஸ்சுக்கு வேலுமணி சவால் விடுக்கும் வகையில் சில கருத்துகளை கூறியதாகவும் சொல்கிறார்கள். இந்த சமயத்தில் கட்சியின் மற்ற சீனியர்கள் ஓபிஎஸ் எதிர்கட்சி துணைத் தலைவராக ஒப்புக் கொண்டால் வேறு பேச்சே எழாது என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து வேண்டா வெறுப்பாக துணைத் தலைவர் பதவியை ஓபிஎஸ் ஏற்றதாக கூறுகிறார்கள்.

அதே சமயம் தனக்கு துணைத் தலைவர் பதவி கொடுக்கப்படவில்லை என்றால் கொறாடாவாக தன்னை அறிவிக்க வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியதாக சொல்கிறார்கள். இதற்கு பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் கொறடா பதவிக்கும் மனோஜ் பாண்டியனை ஓபிஎஸ்சால் கொண்டு வர முடியவில்லை. அதே சமயம் எடப்பாடி ஆதரவாளர் என்கிற அடிப்படையில் கொறடா பதவியை வேலுமணி தனதாக்கிக் கொண்டிருக்கிறார். இதே போல் ஓபிஎஸ் ஆதரவாளர் கடம்பூர் ராஜூவுக்கு சட்டமன்ற குழு பொருளார் பதவி கிடைத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி மிகவும் போராடி தனது ஆதரவாளர் கே.பி.அன்பழகனை அதிமுகவின் சட்டமன்ற குழு செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதே போல் இபிஎஸ்சின் மற்றொரு ஆதரவாளர் அரக்கோணம் எம்எல்ஏ ரவிக்கு துணை கொறடா பதவி கிடைத்தது. அதே சமயம் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கு துணைச் செயலாளர் பதவி மட்டுமே கிடைத்தது. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், எதிர்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு ஓபிஎஸ்டன் எஸ்.பி.வேலுமணி மோதியது தான் தற்போதைய நிலையில் அக்கட்சியில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாகியுள்ளது.
