அமெரிக்காவில் அரசு முறை பயணமாக சென்றுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு 2-வதாக சர்வதேச வளரும் நட்சத்திரம் என்ற ஆசியா விருது வழங்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்காவில் அரசு முறை பயணமாக 10 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 8-ம் தேதி அமெரிக்கா சென்ற அவர் சிகாகோ நகரில் தமிழ்சங்கம் சார்பாக நடத்தப்பட்ட குழந்தைகள் தின விழாவில் பங்கேற்றார். சிகாகோ ஓக் புரூக் டெரேசில் 10-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக நடந்ததற்காக பாராட்டு விழாவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது.

இன்று சிகாகோவில் உள்ள மெடோவ்ஸ் கன்வென்சன் சென்டரில் அமெரிக்க பல இன கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற 'உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது-2019' விழாவில் 'சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: "சர்வதேச வளரும் நட்சத்திம் ஆசியா விருதினை வழங்கி கவுரவப்படுத்தியிருப்பதற்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏதோ சாதித்து விட்டோம் என்ற நினைப்பில் இல்லாமல் - மிகப்பெரிய பொறுப்பு - புதிய பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்ற உணர்வுடன் இந்த விருதினை மிகுந்த பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

என் மீது நீங்கள் வைத்திருக்கும் அளவு கடந்த எதிர்பார்ப்பும், அன்பும் - எனது பொறுப்பை இரட்டிப்பாக்கியிருக்கிறது. அர்ப்பணிப்புடனும், பேரார்வத்துடனும், திறமையுடனும் என் பொதுப்பணியை இனிமேலும் தொடர்ந்து, உங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட வேண்டிய பெரும் கடமை எனக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கும் - குறிப்பாக சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்ந்து - பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் சிகாகோ வாழ் தமிழ்ச் சமுதாயத்திற்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.