உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்திவருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம், இந்த மாத இறுதியுடன் நிறைவடைகிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, கடந்த 13 நாட்களாக அதிமுக எம்.பிக்கள், நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்திலும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால், உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வாய்ப்பில்லை என மத்திய நீர்வளத்துறை செயலர் உபேந்திர பிரசாத் சிங் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழக சட்டசபையில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வாய்ப்பில்லை என யு.பி.சிங் கூறியதை சுட்டிக்காட்டி, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் 6 வாரத்திற்கும் வாரியம் அமைக்கப்படாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் உரைக்கு பதிலளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், நீங்கள் எந்தளவிற்கான அழுத்தம் தருகிறீர்களோ, அதே அளவிற்கான அழுத்தம் மத்திய அரசிற்கு அழுத்தம் தந்து கொண்டிருக்கிறோம். 6 வாரத்திற்குள் மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால், அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று அனைவரும் கூடி பேசி முடிவெடுப்போம் என பன்னீர்செல்வம் பதிலளித்தார்.