கோவையில் கடந்த 2 நாட்களாக ஆயுர்வேத சிகிச்சை பெற்று வரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நாளை மாலை திடீரென டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் தேவைகள் குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைத்தார். பின்னர், அதிமுகவில் பல்வேறு சலசலப்பு நிலவி வரும் நிலையில், முதல்வர் எப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களான அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நிதிக் கட்கரி உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்தார். 

இதனிடையே தேனி மக்களவை தொகுதி வெற்றி தனது மகன் பதவியேற்பு விழாவில் கூட பங்கேற்காமல் ஓபிஎஸ் கோவையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், திடீரென துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை மாலை டெல்லி செல்ல உள்ளார்.  
 
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2019-2020-ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை ஜூலை மாதம் 5-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இதனையடுத்து, அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க டெல்லி செல்கிறார். அப்போது, மேலும் சில அமைச்சர்களை அவர் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றாலும் மற்ற மத்திய அமைச்சர்களையும் சந்தித்து பேசினார். அதேவகையில் ஓபிஎஸூம் பிற மத்திய அமைச்சர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது துறை சார்ந்த ஆலோசனை மட்டுமல்லாது அரசியல் சார்ந்த விஷயங்களும் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.