கோயம்பேடு சந்தையை புதுப்பித்து மீண்டும் திறப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பணிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.

கோயம்பேடு மார்க்கெட் மொத்த வணிக வளாகத்தில் 1985 காய்கறி கடைகள் உள்ளன, அத்துடன் 992 பழக்கடைகள், 472 மலர் கடைகள், 498 மளிகை கடைகள் என மொத்தம் 3 ஆயிரத்து 941 கடைகள் இயங்கி வந்தன. இச்சந்தையால் நேரடியாக இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளின் குடும்பங்கள், 10 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்களும் பயன் பெற்று வந்தன. இந்நிலையில் கோயம்பேடு சந்தை கொரோனா பரவல் எதிரொலியால் கடந்த மே 5-ம் தேதி மூடப்பட்டது. சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதுப்பித்து மீண்டும் திறப்பதற்கான பணிகளை CMDA நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 

கோயம்பேடு சந்தையில் ரூ.2 கோடி செலவில் சாலைகள், நடைபாதைகள், மழைநீர் வடிகால்கள், கழிப்பறைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், வாகன நிறுத்தம் போன்ற இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதமாக மேற் கொள்ள ப்பட்டு வரும் மாற்றங்களை ஆய்வு செய்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பணிகள் எப்போது நிறைவடையும் என்பதையும் CMDA உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயனிடம் கேட்டறிந்தார். ஆய்வை முடித்து விட்டு வியாபாரிகள், வணிகர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பதற்கான தேதி, வழிகாட்டு நெறிமுறைகளை இறுதி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சந்தை இயங்கி வந்ததால் அதை தூய்மை செய்யும் பராமரிக்க முடியாமல் பாழடைந்து, சுகாதார சீர்கேட்டுடன் சந்தை இருந்தது. இந்நிலையில் அதை சீரமைக்கும் பணியில் சிஎம்டிஏ நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. சந்தையில் உடைந்த பகுதிகளை சீரமைப்பது, கழிவறைகளில் புனரமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கே கொட்டப்பட்டு வந்த 50 டன் குப்பை கழிவுகளை சந்தை நிர்வாகம் அகற்றியுள்ளது. மேலும் சந்தை முழுவதும் வண்ணம் தீட்டும் பணிகளும் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.