கடந்த 2016–ம் ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி இரவு பிரதமர் மோடி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். கருப்புப்பணம் மற்றும் கள்ளப் பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனால் பொது மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். செல்லாத நோட்டுக்களை மாற்ற அவர்கள் வங்கி வாசல்களில் நாட்கணக்கில் நின்றனர்.நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செல்லாத நோட்டுகள் பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டபோது ரூ.15.41 லட்சம் கோடி ரூபாய் நாட்டில் புழக்கத்தில் இருந்தது. இந்த நிலையில் வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்த செல்லாத நோட்டுகள் அனைத்தும் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணத்தை எண்ணும் பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரிசர்வ் வங்கி பணத்தை எண்ணுவதில் மிகவும் மந்தமாக செயல்படுவதாக கேலி செய்தன.

இந்த நிலையில் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு வங்கிகளுக்கு திரும்பிய பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி எண்ணி முடிக்கும்படி அண்மையில் முடிந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட ரிசர்வ் வங்கியின் அறிக்கையில், 99 சதவீதம் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது  கூடுதலாக 3 சதவீதம் மட்டுமே வந்துள்ளது.அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், மிக, மிகக் குறைந்த அளவு பணம் மட்டுமே வெளியே சென்றுள்ளது.

அதாவது முதல்கட்டமாக ரூ.5 லட்சம் கோடிக்கு கறுப்புப் பணம், கள்ளநோட்டு தடுக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது வெறும் ரூ.10 ஆயிரத்து 720 கோடி மட்டுமே வரவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை கொண்டுவரப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடையும் சூழலில் எத்தனை லட்சம் கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்துள்ளன என்பது குறித்த தெளிவான புள்ளிவிவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.

5 லட்சம்  கோடி கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகக்த தான் இந்த நடவடிக்கை என மோடி கூறியிருந்த நிலையில், தற்போது பெரும்பாலான பணம் திரும்பி வந்துவிட்டதால் அவர் கூறிய கருப்புப் பணம் மற்றும் கள்ளப் பணம் எங்கே என எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்