Asianet News TamilAsianet News Tamil

டெல்டாவில் மழையால் சேதமான நெற்பயிர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!ஹெக்டேருக்கு எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே

கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தலைமைச் செயலகத்தில் இன்று (6.2.2023) அமைச்சர்கள் சந்தித்து விளக்கியதோடு, அதுதொடர்பான அறிக்கையினையும் வழங்கினர். அமைச்சர்களின் கருத்துக்கள் மற்றும் அறிக்கையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு,  பின்வரும் நிவாரணத் தொகுப்பினை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Delta crop damage - Rs.20 thousand per hectare.. cm stalin announcement
Author
First Published Feb 6, 2023, 12:55 PM IST

டெல்டா மாவட்டங்களில் மழையால் சேதமான பயிர்களுக்கு நிவாரணமாக, ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- வங்கக் கடல் மற்றும் அதனருகில் உள்ள மத்திய இந்திய பெருங்கடல் பகுதியில் 29.1.2023 அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.  இது 30.1.2023 அன்று நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது.  இதன் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது. இக்கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர் உள்ளிட்ட வேளாண் பயிர்களை மழை நீர் சூழ்ந்து, சேதம் ஏற்பட்டுள்ளது.   

Delta crop damage - Rs.20 thousand per hectare.. cm stalin announcement

பருவம் தவறிய கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகலவறிந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும்  உணவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகளை பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்திடவும், விவசாயகளிடம் நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறியவும் உத்தரவிட்டார்.

Delta crop damage - Rs.20 thousand per hectare.. cm stalin announcement

அதோடு மட்டுமல்லாமல், கனமழையால் பாதிக்கப்பட்ட அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை நேரடிக் கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்திடும்போது, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 22 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்திட உரிய தளர்வுகளை வழங்கிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியப் பிரதமர் அவர்களுக்கு 5.2.2023 அன்று கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.  அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள் 5.2.2023 அன்று கனமழையால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்ததோடு, விவசாயிகள் மற்றும்  விவசாய சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

Delta crop damage - Rs.20 thousand per hectare.. cm stalin announcement

இந்நிலையில், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தலைமைச் செயலகத்தில் இன்று (6.2.2023) அமைச்சர்கள் சந்தித்து விளக்கியதோடு, அதுதொடர்பான அறிக்கையினையும் வழங்கினர். அமைச்சர்களின் கருத்துக்கள் மற்றும் அறிக்கையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு,  பின்வரும் நிவாரணத் தொகுப்பினை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

*  கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர் சேத கணக்கெடுப்பு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும்.

* கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் எக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும்.

*  நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும்.

*  நெல் தரிசில் உளுந்து தெளித்து கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும்.

* கன மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும்.

*  பருவம் தவறிய கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பயிர் அறுவடை பரிசோதனைகள் முடிக்கப்பட்டிருப்பின், கூடுதலாக மீண்டும் தற்போது மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios