இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரன், டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

5 நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரணைக்காக எடுக்கப்பட்ட டிடிவி.தினகரனை கடந்த 5 நாட்களாக சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று, போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து நேற்று டெல்லி கொண்டு செல்லப்பட்ட அவர் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

அப்போது, அவரை மீண்டும் சில நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க, டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆனால், அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்படுவார் என்றும் சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும், நீதிமன்ற காவலில் அடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், டிடிவி.தினகரனுக்கு ஜாமீன் கோரி, அவரது வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு டெல்லி போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக நடத்திய விசாரணையில் பல்வேறு ஆவணங்களும், சாட்சியங்களும் கைப்பற்றியுள்ளோம்.இந்த நேரத்தில் அவருக்கு ஜாமீன் கொடுத்தால், அதற்கான விசாரணை நடத்த முடியாமல் ஆகும். சாட்சியங்களை கலைத்துவிடுவார்கள் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவிக்கின்றனர்.