delhi police notice to banks about dinakran transaction details

இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரனை, டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதைதொடர்ந்து 5 நாள் போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்ட அவரை சென்னை மற்றும் பல இடங்களுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திகார் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில், டிடிவி.தினகரனை மேலும் சில நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டனர். அதற்கு மறுத்த நீதிமன்றம், 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. மேலும், அவரிடம் விசாரிக்க வேண்டுமானால், வீடியோ கான்பரின்சிங் மூலம் விசாரிக்கலாம் என போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், டிடிவி.தினகரனின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர். மேலும், அவருக்கு வெளிநாடுகளில் பல கோடி சொத்துகளும், வங்கி கணக்கில் பல கோடி பணமும் உள்ளதாக தெரிகிறது. அந்த பணத்தை வைத்து ஹவாலா மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதா என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

இதுதொடர்பாக டிடிவி.தினகரன் கணக்கு வைத்துள்ள அனைத்து வங்கிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், அவரது கணக்கில் இருந்து யார் யாருக்கு, எந்தெந்த தேதியில், எவ்வளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது.

அதேபோல் எந்தெந்த வங்கிகளில் இருந்து அவருக்கு பணம் வந்தது. யார் யார் அனுப்பினர் என்ற விவரங்கள் அதில் கேட்கப்பட்டுள்ளது.