delhi police filed complaint of sasikala pushpa against gokula indhira

தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை மார்பிங் செய்து வௌியிட்டது தொடர்பாக மாநிலங்கள் அவை எம்.பி. சசிகலா புஷ்பா கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிமுக அம்மா அணியின் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை உள்ளிட்ட பலர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அது உண்மையான புகைப்படம் இல்லை மார்பிங் செய்யப்பட்டது என சசிகலா புஷ்பா தரப்பில் கூறப்பட்டது.

 இந்த சம்பவங்கள் நடந்த சில மாதங்கள் கழித்து திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் தாக்கி, சட்டையைக் கிழித்து சசிகலா புஷ்பா சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

அதிமுகவில் இருந்து தான் நீக்கப்பட்டாலும், தொடர்ந்து எம்.பி. பதவியில் நீடிப்பேன் என கூறி அதிமுகவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். மேலும் அதிமுக தலைமை மீது நாடாளுமன்றத்திலும், ஊடகங்களிலும் பல பகிரங்க புகார்களை கூறி சசிகலா புஷ்பா பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தன் மான்புக்கும், மரியாதைக்கும் இழுக்கு உண்டாக்கும் நோக்கில், செயற்கையாக தயாரிக்கப்பட்டவை. இதை சிலர் வேண்டுமென்றே இணையதளத்தில் பதிவேற்றம் ெசய்துள்ளனர் எனக் கூறி டெல்லி போலீசில் எம்.பி. சசிகலா புஷ்பா புகார் அளித்து இருந்தார்.

சசிகலா புஷ்பா அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், தொழில்நுட்பச்சட்டப் பிரிவுகளில் அதிமுக அம்மா அணியின் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை, சாத்தாங்குளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆனந்தராஜ், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைதலைவர் சின்னதுரை, சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பிரியங்கா, உள்ளிட்ட 12 பேர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.