ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு சட்டவிரோதமாக அந்நிய முதலீட்டை பெற்றுதருவதற்காக அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்த சிபிஐ, கடந்த பிப்ரவரி 28ம் தேதி கார்த்தி சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தனர்.

கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டது முதல் நீதிமன்ற காவலில் வைத்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் சி.இ.ஓ இந்திராணி முகர்ஜி, அந்நிய முதலீட்டை பெறுவதற்காக கார்த்தி சிதம்பரத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

கார்த்தி சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் கடந்த 12ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க மறுத்த நீதிபதி, மேலும் 12 நாட்களுக்கு அதாவது 24ம் தேதி வரை திஹார் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டதை அடுத்து கார்த்தி சிதம்பரம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். 

கார்த்தி சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நாளை முடிவடைய உள்ள நிலையில், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 10 லட்சம் ரூபாய் பிணைத்தொகையாக செலுத்துமாறும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.