டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்யக் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் பத்தாம்வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது போல் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்யுமாறு பல மாணவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

"யு.ஜி.சி., பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களுக்கு ஆஃப்லைன்  ஆன்லைன் தேர்வுகளை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த முடிவு லட்சக்கணக்கான இளைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவு தவறானது என்றும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர் என்று கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.ஐ.ஐ.டி, என்.எல்.யூ உள்ளிட்ட புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே உள் மதிப்பீடுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியுள்ள நிலையில் பிற பல்கலைக்கழகங்கள் ஏன் அதே போல் பட்டம் கொடுக்க முடியாது என்று கெஜ்ரிவால் கேள்வியெழுப்பியுள்ளார்.

இளைஞர்களின் நலனுக்காக, டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் பிற மத்திய அரசு பல்கலைக்கழகங்களின் இறுதி ஆண்டு தேர்வுகளை தனிப்பட்ட முறையில் தலையிட்டு ரத்து செய்து எதிர்காலத்தை காப்பாற்றுமாறு நான் பிரதமரை கேட்டுக்கொள்கிறேன்.இன்று முன்னதாக, டெல்லியில் உள்ள அனைத்து மாநில பல்கலைக்கழக தேர்வுகளையும் ரத்து செய்வதாக டெல்லி அரசு அறிவித்தது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக இறுதி செமஸ்டர் தேர்வு உள்ளிட்ட அனைத்து மாநில பல்கலைக்கழக தேர்வுகளையும் ரத்து செய்ய டெல்லி முடிவு செய்துள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.