இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காகத் தேர்தல் ஆணையத்துக்கு, பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலமாக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரனை 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி டெல்லி குற்றவியல் போலீசார் கைது செய்தனர். அவரைச் சிறையில் அடைக்க டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தினகரன் மற்றும் அவரின் நண்பர்களான மல்லிகார்ஜுன், ஹவாலா தரகர் நரேஷ், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை, அங்கிருந்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டிருந்த தினகரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

பின்னர் இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று தினகரன் சார்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இருந்து தனது பேரை நீக்கம் வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று (நவம்பர் 17) நீதிபதி அருண் பரத்வாஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். அதோடு, இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கிறது என்றும், சதித் திட்டம் தீட்டுதல், அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி, சாட்சியங்களைக் கலைத்தல் போன்ற தினகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் முகாந்திரம் உள்ளது.

எனவே இவ்வழக்கில் இருந்து தினகரன், குற்றம்சாட்டப்பட்ட தரகர் சுகேஷ் சந்திரசேகரன், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுன், குமார் ஆகியோரை விடுவிக்க நீதிபதி மறுப்புத் தெரிவித்தார். அதோடு வரும் டிசம்பர் 4ஆம் தேதி தினகரன், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நந்துசிங், லலித்குமார் உள்ளிட்டோரை விடுவிக்கவும் நீதிபதி அருண் பரத்வாஜ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சிலரது சதியின் காரணமாக, இரட்டை இலையைப் பெற லஞ்சம் கொடுத்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து என்னை விடுவிக்கச் சொல்லி நான் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தி, இது பொய் வழக்குதான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.