கொரோனாவை காரணம் காட்டி மதச்சார்பின்மை உள்ளிட்ட பாடங்களை நீக்க விட்டதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகளை மத்திய, மாநிலப் பள்ளிக் கல்வி வாரியங்கள் நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. புதிய கல்வியாண்டான ஜூன் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை. கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள கல்வி வேலை நாட்கள் குறைப்பால், பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

தனியார் பள்ளி வாரியமான சிஐஎஸ்சிஇ, 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை 25 சதவீதம் குறைத்தது. இதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை 30 சதவீதம் வரை குறைத்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

‘‘கரோனாவை காரணம் காட்டி 30 சதவீத பாடம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டு தங்களுக்கு தகுந்தவாறு பாஜக ஆதரவாளர்கள் இதனை பயன்படுத்திக் கொண்டனர். சிபிஎஸ்இ 9 மற்றும் 11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம், மற்றும் மதச் சார்பின்மை ஆகிய அத்தியாயங்களும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்திலும் முக்கிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு பிடிக்காத பாடங்களை கரோனாவை காரணம் காட்டி நீக்கி விட்டார்கள்.’’எனத் தெரிவித்துள்ளார்.