நாட்டின் முதல் முழுநேர பாதுகாப்பு துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பாதுகாப்பு துறையில் உள்ள 3 முக்கிய பிரிவுகளையும் நவீனப்படுத்தும் முக்கியப்  சவாலை அவர் எதிர்கொள்ள வேண்டிய இருக்கிறது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பின், பாதுகாப்பு துறைக்கு பொறுப்பு ஏற்கும் 2-வது பெண் அமைச்சர் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.

பாதுகாப்பு துறை

மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராக சென்றதையடுத்து, அவர் வகித்து வந்த பாதுகாப்புதுறை நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. ஆனால், மிகப்பெரிய பொறுப்பான நிதித்துறையோடு, பாதுகாப்பு துறையும் சேர்த்துப்பார்ப்பதில் அவருக்கு கடும் சிக்கல் இருந்தது. அதேசமயம், வர்த்கத்துறையை சிறப்பாக கவனித்து, செயல்பட்ட நிர்மலா சீதாராமனுக்கு பதவி உயர்வு அளிக்கும் வகையில் பாதுகாப்பு துறையை பிரதமர் மோடி வழங்கி உள்ளார்.

அமைச்சர்கள் குழு

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் , வௌியுறவுத்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோர் அடங்கிய பாதுகாப்பான மத்திய அமைச்சரவைக் குழுவில் சீதாராமனும் இனிமல் பங்கேற்பார்.

மிகப்பெரிய சக்தி

பதவி ஏற்புவிழாவில் பெரும்பாலான அமைச்சர்கள் இந்தியில் உறுதி மொழி எடுத்துக்கொண்டபோது, நிர்மலா சீதாராமன் ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்றார்.

பதவி ஏற்றபின் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறுகையில், “ சிறிய நகரத்தில் இருந்து வந்தவர்களுக்கு, கட்சியில் உள்ள தலைவர்கள் வளர்வதற்கு இடம் கொடுத்து, ஆதரவு அளித்து மிகப்பெரிய பொறுப்பு அளித்தால், இங்கு ஏதோ மிகப்பெரிய சக்தி இருக்கிறது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது மற்றவகையில் இது சாத்தியமில்லை’’ எனத் தெரிவித்தார்.

எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்

பாதுகாப்பு துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றுள்ள நிர்மலா சீதாராமன் முன் பல சவால்கள் காத்திருக்கின்றன. ராணுவம், கடற்படை, விமானப்படையை நவீனப்படுத்துதல்,  அரசில் சூழலுக்கு ஏற்றார்போல் மாற்றி அமைத்தல், மண்டலங்கள் இடையே பாதுகாப்பை மாற்றி அமைத்தல் ஆகியவை செய்ய வேண்டும்.

கடந்த சில மாதங்களாக இந்தியா-சீனா இடையே டோக்லாம் எல்லை பிரச்சினை தீவிரமாக இருந்தது. மேலும், எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுதல், தாக்குதல் ஆகியவற்றையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் நிர்மலா சீதாராமனுக்கு இருக்கிறது.

உள்நாட்டில் பாதுகாப்பு துறைக்கான உற்பத்தியை பெருக்குதல், அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளையும் செய்ய வேண்டிய நிலையில் நிர்மலா இருக்கிறார். புதிய ஓப்பந்தத்தின்படி நீர்மூழ்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள் தயாரிப்பில் அன்னிய நிறுவனங்களுடன், தேர்வு செய்யப்பட்ட இந்திய நிறுவனங்கள் கூட்டாக தயாரிப்பில் ஈடுபட உள்ளன.

பாரிக்கர் பதவிக்காலத்தில் தேங்கிக்கிடந்த பல்வேறு திட்டங்களை முடுக்கிவிட்டார், ஆயுத கொள்முதல் ஒப்பந்தங்களை விரைவுப்படுத்தினார். ஆனால், பெரும்பாலான நவீனப்படுத்தும் திட்டங்கல் அனைத்தும், நிர்வாக ரீதியான சிக்கல்கள் உள்ளிட்ட காரணமாகவே தாமதப்டுத்தப்பட்டன.  இவற்றை களைய வேண்டிய கட்டாயத்தில் நிர்மலா சீதாராமன் உள்ளார்.

 ‘மதுரைக்கார’ பாதுகாப்பு அமைச்சர்

நிர்மலாசீதாராமன் மதுரையில் பிறந்தவர். திருச்சியல் உள்ள சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பு முடித்தார். எம்.ஏ. பொருளாதாரத்தை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.