தமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகளை, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் ஒரு திருமண விழாவில் பேசும்போதுகூட, அரசை விமர்சனம் செய்தார். தமிழக அரசுக்கு சிறந்த நல்லாட்சி விருது கொடுத்தவரை அடிக்க வேண்டும் என்று அவர் ஆக்ரோஷமாக பேசினார். மேலும், உள்ளாட்சி துறை அமைச்சர் தொடர்பாகவும், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விமர்சித்ததாகவும் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. 

அதில், தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் மு.க.ஸ்டாலினை தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்குகளை இன்று விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார், முதலமைச்சரை விமர்சித்தது, சிஏஏ தொடர்பாக அரசை விமர்சித்தது ஆகிய இரு வழக்குகளில் மார்ச் 4-ம் தேதியும், உள்ளாட்சி துறை அமைச்சரை விமர்சித்தது தொடர்பான வழக்கில் பிப்ரவரி 24-ம் தேதியும் நேரில் ஆஜராக மு.க.ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.