தமிழக முதல்வர் ஜெயல்லிதா மறைந்த பிறகு தமிழக அரசு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவை யார் வழி நடத்துவது என்ற பிரச்னை எழுந்தது. சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று கட்சியின் முன்னணி நிர்வாகிகள், அமைச்சர்கள், அனைவரும் ஒருமனதாக முடிவெடுத்தனர்.

கடந்த 29ந்தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் முழு கட்டுப்பாடும் அவரின் கீழ் வந்தது.

ஆனாலும், சசிகலாவுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு அலைகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. கட்சியின் அடிமட்டத்தொண்டர்கள் சசிலகலாவை ஏற்றுக்கொள்வதாக இல்லை. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடர்ந்து சசிகலாவை எதிர்த்து வருகிறார்.

தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் தினந்தோறும் கட்சி உறுப்பினர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். ஆரம்பத்தில் தன்னுடைய நிலையை உறுதியாக சொல்லாமல் இருந்த தீபா பின்னர் போகப்போக தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தெளிவாக கூறியுள்ளார்.

எம்ஜிஆர் பிறந்த நாளில் தன்னுடைய முடிவை அறிவிக்க உள்ளதாகவும் பொது மக்கள் கட்சித் தொண்டர்கள் அனைவரின் கருத்தையும் கேட்டு, தன்னுடைய எதிர்காலப் பாதையை அமைக்க உள்ளதாகவும், தீபா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தீபாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு கூடி வரும் நிலையில் மாவட்டந்தோறும் தீபா பேரவை, தீபா வழக்கறிஞர்கள் பேரவை என்று ஆயிரக்கணக்கானோர் தன்னெழுச்சியாக ஆரம்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், தீபா ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை நங்க நல்லூர் கே.சி.டி. திருமண மண்டபத்தில் இன்று நடப்பதாக வாட்ஸ் அப் மூலம் தகவல்கள் வெளியானது. இதையடுத்து பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தீப ஆதரவாளர்கள் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொள்வாக்ள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த தீபா ஆதவாளர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

மண்டபத்திற்கு வெளியே ஆவேசமாக பேட்டியளித்த தொண்டர்கள், “அக்கா தலைமையில் ஆட்சியமைப்பது உறுதி. தமிழகம் முழுவதும் இருந்து 5 ஆயிரம் பேர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தோம்.

ஆனால் திடீர் நெருக்டி காரணமாக 2 ஆயிரம் பேருக்கு மேல் கூடியுள்ளோம். ஜெ. தீபாவை அடக்கி ஒடுக்கி ஓரங்கட்டலாம் என்று நினைக்கிறார்கள். வைய வைய வைரக்கல்லாக தீபா வருவார். சாதி, மதம் பார்க்காமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் தீபாவின் பின்னால் அணி திரள்வார்கள். கடல் அலையை அணை போட்டு தடுக்க முடியாது.

எங்களை யாராலும் தடுக்க முடியாது. மண்டபம் தராவிட்டால் என்ன… நாங்கள் சாலையில் அமர்ந்து கூட எங்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவோம்” என்று ஆவேசமாக தெரிவித்தனர்.