முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், அவரது அண்ணன் மகள் தீபாவை, அதிமுக பொது செயலாளர் பொறுப்பில் உட்கார வைக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகளும், பெரும்பாலான தொண்டர்களும் விரும்பினர். ஆனால், பொதுக்குழு மூலம்,சசிகலா, கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டார்.

இதனால், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும் தீபாவை, ஜெயலலிதா, எம்ஜிஆர் பெயரில் தனி இயக்கம் காண வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும்,தினமும் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், சென்னை தி.நகரில் உள்ள தீபா வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அவர்கள், தங்கள் எண்ணங்களை நேரடியாகவே அவரிடம் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களிடம், உங்கள் எண்ணங்களை அறிந்து கொண்டேன். என் எண்ணமும் அதுதான். விரைவில் அதற்கான ஏற்பாடுகளுடன், என் முடிவை அறிவிக்கிறேன் என சொல்லும் தீபா,ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களுக்கு விடை தெரிய வேண்டும் என்றும் பக்குவமாகப் பேசி, தொண்டர்களை அனுப்புகிறார்.

இதற்கிடையில் சேலம், திருச்சி, கரூர், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீபா பேரவை ஆரம்பித்து, உறுப்பினர் சேர்க்கையையும், அதிமுகவினர் துவங்கி விட்டனர்.

சேலத்தில், எம்ஜிஆர், ஜெயலலிதா அதிமுக என்ற பெயரில் புதிய இயக்கத்தையும் ஆரம்பித்து கொடி, சின்னம் ஆகியவற்றையும் அறிவித்து விட்டனர். இந்த இயக்கம் தீபா தலைமை தாங்கி நடத்துவதற்காக துவங்கப்பட்ட இயக்கம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, அம்மா தி.மு.க., என்ற பெயரிலும், தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, கட்சி துவங்கப்பட்டுள்ளது.

தீபாவுக்கு ஆதரவு வட்டம் பெருகுவதை, அதிமுக நிர்வாகிகளால் பொறுக்க முடியாமல் சிலர், தீபா குறித்து பல்வேறு விதமான செய்திகளை, வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பரப்புகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, தீபாவின் கணவர் பேட்ரிக். அவருக்காக தீபாவும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விட்டார். அவர் தற்போது கிறிஸ்துவராகவே உள்ளார். அதனால்தான், அவர், நெற்றியில் பொட்டு வைப்பதில்லை. தீபாவை, இந்து இயக்கங்கள் தாங்கி பிடிக்க முயல்கின்றன. ஆனால், அவர் அதை விரும்பவில்லை. காரணம், அவர் கிறிஸ்தவர் என்பதுதான்.

அதுமட்டுமல்ல, அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அதனால்தான், கட்சித் துவக்கும் பணியிலோ, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அதிமுக தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை தவிர்த்து வருகிறார் என தகவல் பரப்புகின்றனர்.‘

இதுகுறித்து தீபா கூறுகையில், நான் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறேன்; கிறிஸ்தவராக மாறி விட்டேன் என, இப்போது சொல்லவில்லை. என் அத்தை ஜெயலலிதா இறந்த சில நாட்களில், நான், அவர் மரணத்தில் ஒளிந்து கிடக்கும் மர்மம் விலக வேண்டும் என சொல்ல ஆரம்பித்த, சில நாட்களிலேயே இப்படி, செய்தி பரப்ப துவங்கி விட்டார்கள்.

அதுவும், நான், கிறிஸ்துமசுக்காக, டிவிட்டர் மூலம் வாழ்த்து செய்து பதிவிட்டதும், பார்த்தீர்களா… தீபா கிறிஸ்தவர்தான் என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும் என்றும் சொல்லத் துவங்கினார்கள்.

அப்போதே நான் சொன்னேன். நான், எல்லா மத பண்டிகைகளுக்கும், அந்த மதத்தை சார்ந்தவர்களுக்கு வாழ்த்து சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ரம்ஜான் நாளில், முஸ்லிம்களுக்கு வாழ்த்துச் சொன்னேன். உடனே, நான் முஸ்லிம் மதத்துக்கு மாறி விட்டேன் என சொல்ல முடியுமா?

அரசியல் ரீதியில், நான், பலம் பெற்று விடுவேன் என்ற அச்சத்தில், சிலர் இப்படியெல்லாம் செய்தி பரப்புகின்றனர். அதில் கவனம் செலுத்தி, நேரத்தை வீணடிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் விருப்பத்தை, அந்த விஷயத்திலும் நான் நிறைவேற்ற மாட்டேன்.

இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, அனைத்து மத இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் என்னை சந்திக்கின்றனர். அவர்கள், நான், தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அப்படி நடந்தால், நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவோம் என்றும் கூறுகின்றனர். எது நல்லதோ, அதை கட்டாயம் செய்வேன் என்றுதான், அவர்களிடம் சொல்லி அனுப்புகிறேன்.

இந்த நேரத்தில் எதை செய்ய வேண்டுமோ, அதை தீவிரமாக ஆராய்ந்து யோசித்துதான் செய்வேன். யாருக்காவும் அவசரப்பட்டு எதையும் செய்ய மாட்டேன். மற்றபடி, எனது குடும்ப விஷயம், வெளியில் இருப்பவர்களுக்கு தேவையில்லாதது.

என்னை சந்திக்க வரும் தொண்டர்களை சிலர் மிரட்டுவதாக தெரியவந்துள்ளது. யாரையும் மிரட்டி, அவர்களுக்கு பணிய வைக்க முடியாது. நடப்பது, நல்லவிதமாக நடந்தே தீரும். 

இவ்வாறு அவர் கூறினார்.