ஆர்கே நகர் இடைத்தேர்தல் நேற்று இரவு ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கு பாஜகவை தவிர மற்ற கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தேர்தலை ரத்து செய்வதால் எந்த பலனும் இல்லை. தேர்தல் முறைகேடில் ஈடுபடும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.

மேலும், பணம் பட்டுவாடா செய்பவர்கள் குறித்து, பலமுறை புகார் கூறியுள்ளனர். ஆனால், தேர்தல் ஆணையம் அதை கண்டு கொள்ளவில்லை. தேர்தலுக்கான அனைத்து ஆயத்த பணிகளையும் தீவிரமாக செய்து வரும் வேளையில், தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது வேதனை அளிக்கிறது என வேட்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், ஆர்கே நகரில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய தீபா, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்களை, தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து தீபா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஆர்.கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது ஏற்புடையதல்ல. எந்த கட்சியின் வேட்பாளர்கள், ஓட்டுக்கு பணம் கொடுத்தார்களோ, அவர்கள் தேர்தல் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.