ஜனநாயக படுகொலை செய்த சசிகலா குடும்பத்தின் அராஜக ஆட்சி தொடர கூடாது….தீபா ஆவேசம்…

தமிழக சட்டசபையில் இன்று ஜனநாயகத்தை படுகொலை செய்யும் வகையில் நிகழ்ந்த சம்பவங்கள் மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது என்றும், சசிகலா குடும்பத்தின் அராஜக ஆட்சி இனி தமிழகத்தில் தொடர கூடாது என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது.

சென்னை கூவத்துரை அடுத்த சொகுசு விடுதியில் கடந்த 11 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 122 எம்எல்ஏக்களும் மிகுந்த பாதுகாப்புடன் சட்டப் பேரவைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என திமுக, காங்கிரஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர் வலியுறுத்தினர்.

அப்போது ஏற்பட்ட கடும் அமளியினால் சட்டப் பேரவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.

3 வது முறையாக 3 மணிக்கு அவை மீண்டும் தொடங்க இருந்த நிலையில் திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனால் சட்டசபை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக சபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஒரு ஜனநாயக படுகொலை என தெரிவித்துள்ளார். மேலும் சசிகலா குடும்பத்தின் அராஜக ஆட்சி தொடர கூடாது என்றும் ஒரு குறிப்பிட்ட குடும்பம் ஆட்சியை கைப்பற்றிவிடக் கூடாது எனவும் தீபா தெரிவித்தார்.