Deepa husband Madhavan Trolled by Social media users
கடை ஆரம்பிப்பதை விட கட்சி ஆரம்பிப்பது சுலபம் என்று நெட்டிசன்கள் மீம்ஸ் வெளியிடுவதில் தவறு இல்லை என்பதை நிரூபிப்பது போல, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவராகிய மாதவன் இன்று புதிய கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார்.
கட்சியின் பெயர் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம். வழக்கம் போல, இன்று காலை ஜெயலலிதா சமாதிக்கு சென்று, மலர் அஞ்சலி செலுத்தி விட்டு கட்சி தொடங்குவதை முறையாக அறிவித்துள்ளார்.
மீத்தேன் விவகாரம், காவிரி போராட்டம் போன்றவற்றில் பங்கெடுத்து கொண்டதாகவும் கூறியுள்ளார் மாதவன். இந்த தகுதி போதாதா என்ன?
ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா என்று ஒருவர் இருக்கிறார் என்பதே, ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போதுதான் பலருக்கும் தெரிய வந்தது.
தீபாவின் கணவர் பெயர் மாதவன் என்பது, தீபாவை அதிமுக தொண்டர்கள் நாடி சென்ற பிறகுதான் தெரிந்தது.
எனவே, "அந்த ஏழு நாட்கள்" படத்தில் வரும் "பாலக்காட்டு மாதவன்" அளவுக்கு கூட இவர் பிரபலம் ஆகவில்லை. தீபா மாதவன் என்றால்தான், மற்றவர்களுக்கே தெரியவரும்.
பெண்கள் தங்கள் பெயருக்கு பின்னால், தந்தையின் பெயரையோ, கணவரின் பெயரையோ போட்டு கொள்வது வழக்கம்.
ஆனால், இவரோ தன்னுடைய பெயருக்கு முன்னால், தமது மனைவியின் பெயரை போட்டால்தான், ஓகோ "தீபா மாதவனா" என்று மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
அவரை நம்பியும் சில தொண்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வேலை இல்லா திண்டாட்டத்தை சமாளிக்க தொகுதிக்கு ஒரு கட்சி ஆரம்பித்தால் கூட நன்றாகத்தான் இருக்கும்.
அப்போதுதான், யாரும், யாருடைய சமாதியையும் தேடிப்போக வேண்டிய அவசியமும் இருக்காது.
நெட்டிசன்கள் பார்வையில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா முன்னேற்ற கழகத்தின், முதல் எழுத்துக்களை அடிப்படியாக கொண்டு, வேறொரு விளக்கத்தை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதன்படி, எம் - மாதவன், ஜெ- ஜெயலலிதா, டி- தீபா, எம் - முன்னாள், கே - கணவர் என்பதுதான், அவர்கள் கொடுக்கும் விளக்கம்.
அவர் கட்சி ஆரம்பித்தது கூட பரவாயில்லை, ஆனால், அவர் தமது கட்சியில் சேர அழைப்பு விடுத்த முதல் நபரே தீபாதான்.
உலகிலேயே, கட்சி ஆரம்பித்து, தமது கட்சியில் சேர மனைவிக்கே அழைப்பு விடுத்த முதல் நபர், மாதவனாகத்தான் இருக்க முடியும்.
கணவன் மனைவி சண்டைக்கெல்லாம் ஒரு கட்சி ஆரம்பித்தால், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கட்சிதான் ஆரம்பிக்க வேண்டும்.
ம்.. இனி என்னென்ன கொடுமைகளை எல்லாம், இந்த நாடு பார்க்கப் போகிறதோ.. ஆள விடுங்கடா சாமி... தாங்க முடியல..
