deepa chosen pen symbol for rk nagar election

சென்னை ஆர்கே நகர் தொகுதி முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்ததால் காலியாக இருந்தது. காலியாக உள்ள இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 12ம் தேதி நடைபெரும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி கடந்த 16ம் தேதி முதல் 23ம் தேதி வரை இத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்ய கூறியிருந்தது. அதன்படி 127 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்து இருந்தனர்.

இதனிடையே 24ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதில் 82 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வேட்புமனுவை வாபஸ் பெருவதற்கு நாளை கடைசி என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆர் கே நகரில் திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக அம்மா கட்சி சார்பில் டிடிவி தினகரன், அதிமுக புரட்சி தலைவி அம்மா வேட்பாளர் மதுசுதனன், எம்ஜிஆர் ஜெ தீபா பேரவை சார்பில் தீபா, பாஜக சார்பில் கங்கை அமரன் என்று முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் ஆர்கே நகரில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கப்போவதாக தீபா தெரிவித்துள்ளார். மேலும் 27 மற்றும் 28ம் தேதிகளில் பிரச்சார பொதுகூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு அனுமதிகோரியுள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் 256 வாக்கு சாவடிக்கு தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டும் 57 தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தீபா பேரவை தெரிவித்துள்ளது.

தீபா ஊடகத்துறையில் பட்டம் பெற்று செய்தியாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணிபுரிந்தவர் என்பதால் பேனா சின்னத்தை தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் அப்படி பேனா சின்னம் கிடைக்க வில்லை எனில் படகு சின்னத்தை தேர்வு செய்ய உள்ளதாக தெரிகிறது.