தனது தொண்டர்களை ஓபிஎஸ் இழுத்ததற்கு பிறகுதான் அவரது செல்வாக்கு கூடியதாகவும், பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் ஜெ.தீபா குற்றம்சாட்டியுள்ளார். 

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஓரணியாகவும் ஓபிஎஸ் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்தது. அந்த சமயத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தனியாக செயல்பட்டு வந்தார். அவருக்கும் சில தொண்டர்கள் ஆதரவளித்தனர். 

பின்னர், சசிகலா - தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கிவிட்டு ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைந்தன. கட்சி மற்றும் ஆட்சியில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே அதிகாரப்பகிர்வுகள் ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டன. 

அதன்பிறகு தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, துணை முதல்வர் பன்னீர்செல்வம் என்னை அரசியல் ரீதியாக ஏமாற்றிவிட்டு என் தொண்டர்களை அவர் பக்கம் இழுத்துவிட்டார். அதன்பிறகு தான் அவரது செல்வாக்கு உயர்ந்தது என குற்றம்சாட்டியுள்ளார்.