அ.ம.மு.க., கட்சியை நடத்திக்கொண்டு இருக்கிற அக்கட்சியின் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும் இருக்கிறார். ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கிற  இந்த தொகுதியில்  ஊரடங்கால், நிறைய பேர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 

ஆர்.கே.நகரில் இருக்கிற, அ.ம.மு.க., நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசிய டி.டி.வி.தினகரன், 'மக்களுக்கு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொடுங்கள்' என உத்தரவு போட்டு இருக்கிறார். ஆனால், அதை அந்தக் காதில் வாங்கி இந்த காதில் போட்டு விட்டு, நிர்வாகிகள் கமுக்கமாக இருந்து  வருகிறார்கள்.

மக்களவை தேர்தலுக்கு முன்பெல்லாம் டி.டி.வி.தினகரன் சொல்லும் உத்தரவுக்காக காத்திருந்து கடமையாற்றுவார்கள் அவரது கட்சிக்காரர்கள். அண்ணன் சொல்லிவிட்டால் அடுத்து செயல்புலியாகி களத்தில் குதித்து விடுவார்கள். ஆனால், மக்களவை தேர்தலில் பலத்த தோல்வி அடைந்த பிறகு டி.டி.வி.தினகரனை அவரது கட்சிக்காரர்களே கண்டு கொள்வதில்லை. அவருடன் நெருக்கமாக இருந்த முக்கிய நிர்வாகிகளும் மாற்று கட்சிகளுக்கு தாவி விட்டனர். இதனால் ஒருபக்கம் வருத்தம் இருந்தாலும், மீசையில் மண் ஒட்டாதது போல் கடந்து சென்று வருகிறார் டி.டி.வி.தினகரன் என்கிறார்கள் அவரது கட்சியை சார்ந்தவர்கள்.