தயாநிதி மாறன் டெல்லியில் மற்ற திமுக எம்பிக்களிடம் இருந்து தனித்து தெரிய ஐடி விங்க் போன்றதொரு செட்டப்பை ஏற்பாடு செய்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவராக டி.ஆர் பாலு நியமிக்கப்பட்டார். இதேபோல் துணைத்தலைவராக கனிமொழி செயல்பட்டு வருகிறார். ஆனால் நன்றாக கவனித்து வருபவர்களுக்கு தெரியும் எம்.பி.யாக பதவி ஏற்றது முதல் தற்போது வரை திமுக எம்.பி. தயாநிதிமாறன் குறித்த செய்தி தான் அதிக அளவில் வெளியே வருகிறது. வழக்கத்திற்கு மாறாக சமூக வலைதளங்களில் தயாநிதி மாறன் தொடர்பான பாசிட்டிவ் விஷயங்கள் அதிகம் வைரல் ஆகின்றன. 

அதிலும் தமிழகத்தில் தெற்கு ரயில்வே அதிகாரிகள் இடையே தகவல் தொடர்புக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியை தான் பயன்படுத்த வேண்டும் என்கிற உத்தரவுக்கு எதிராக தயாநிதிமாறன் கொதித்து எழுந்து போராட்டம் நடத்தினார். இந்த செய்தி சன் தொலைக்காட்சி குழுமத்தை தாண்டி அனைத்து ஊடகங்களிலும் முக்கிய செய்தியானது. இதன் பின்னணியில் சன் டிவியின் மூத்த செய்தியாளர் ஒருவர் இருந்துள்ளார்.

தயாநிதிமாறன் போராட்டம் குறித்த செய்தியை மற்ற ஊடகங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து அவர்களை சென்ட்ரல் வரவழைத்து நேரலையாக ஒளிபரப்பச் செய்தது முதல் அனைத்தும சுபமாக முடியும் வரை தொடர்ச்சியான கவரேஜூக்கு அவர் அனைத்து வேலைகளையும் கச்சிதமாக செய்திருந்தார். இதே போல் நாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்க என்று தயாநிதி மாறன் முழங்கி பதவி ஏற்றதும் வைரல் ஆனது. 

இதன் பின்னணியில் டெல்லியில் உள்ள சன் டிவியின் செய்தியாளர் இருக்கிறார். அவர் தான் அந்த கிளிப்பிங்கை உடனடியாக பெற்று வாட்ஸ் ஆப்பில் பரப்பியுள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் தொடர்ச்சியாக முன்னணி ஊடக நிறுவனங்களுக்கு தயாநிதிமாறன் தொடர்புடைய செய்திகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் பேச உள்ள தகவல் முதல் நாளே பகிரப்படுகின்றன.

இந்த பணிகள் அனைத்தையும் செய்வது சன் டிவி ஊழியர்கள் தான். தனியாக பிரத்யேக ஐடி விங்கை ஏற்படுத்தினால் ஸ்டாலினின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம் என்பதால் சன் டிவி ஊழியர்களை வைத்து தன்னை தயாநிதி விளம்பரம் செய்து கொள்வதாக கூறுகிறார்கள். மேலும் 10 ஆண்டுகளாக எம்பியாக இருந்த தயாநிதி மாறன் அப்போது தன்னை பற்றிய செய்தி சன் டிவியில் கூட வராமல் பார்த்துக் கொள்வார். 

அந்த அளவிற்கு விளம்பரம் தேவையில்லை என்று இருந்தவர் தற்போது தன்னை தானே விளம்பரம் செய்து கொள்வது ஏன் என்பது தான் திமுக முக்கிய நிர்வாகிகள் பலரின் கவலையாக உள்ளது. அதிலும் டெல்லியில் திமுக எம்பிக்கள் எழுப்பும் அனைத்து பிரச்சனைகளிலும் தயாநிதிமாறன் ஸ்கோர் செய்துவிடுவதும் அவர்களின் குழப்பத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.