*     சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்! என்று கருணாஸ் கிளப்பியுள்ள பூகம்பத்தின் பின்னணியில் தி.மு.க. இருக்கிறது: என்று வலுவாக நம்புகிறது எடப்பாடியார் தரப்பு. ஸ்டாலினை எடப்பாடியார் ‘நீ’ என ஒருமையில் பேசியது தவறு! என கருணாஸ் சப்போர்ட் செய்ததையும், கருணாஸ் ஆஸ்பிடலில் அட்மிட் ஆனதும் தி.மு.க. முக்கியஸ்தர்கள் அவரை சந்தித்ததையும் முடிச்சுப்போட்டு இதற்கு வலு சேர்த்து யோசிக்கிறார்கள். 

*    எடப்பாடியார் அரசுக்கு எதிராக தொடர் உண்ணாவிரதத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி. நாளை அரவக்குறிச்சியில் நடைபெற இருக்கும் உண்ணாவிரதத்தில் அவரது கட்சியின் தலைவர் டி.டி.வி. தினகரன் கலந்து கொள்கிறார். தன்னை சந்தித்தது குறித்து ஓ.பி.எஸ். கொடுத்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம், இரண்டு தொகுதி இடைத்தேர்தல் இப்போதைக்கு இல்லை எனும் சூழல், அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல்! என சென்சிடீவ் விஷயங்களை வைத்து வெளுத்தெடுப்பார் டி.டி.வி.! என பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. 

*    தன் கட்சி சார்பாக 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை 2019 ஜனவரியில் அறிவிக்கும் முடிவில் இருக்கிறாராம் சரத்குமார். இதன் மூலம் அந்த நபர்கள் அந்தந்த தொகுதியில் மக்களோடு ஐக்கியமாகி பெரும் மதிப்பை பெறுவார்கள், அதன் மூலம் பெரும் வாக்குகளை பெறுவார்கள்! என்பது சரத்தின் கணக்காம். 

*    சர்க்கார் பட மேடையில் விஜய் பேசியவை எல்லாமே முன்பே திட்டமிட்டு எழுதப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டு நடந்தவையே! என்கிறார்கள் அரசியல் கம் சினிமா விமர்சகர்கள். அதை மறைத்து, ஏதோ இயல்பாய் பேசுவது போல் துவக்கத்தில் விஜய் முயன்றாலும் கூட, போகப்போக அவரது சினிமா டயலாக் டெலிவரி போலவே அது ஆனதை சுட்டிக்காட்டி நிரூபிக்கிறார்கள். 

*    எல்லா திறமைகளுமிருந்தும், பல வருடங்களாக ஃபீல்டில் இருந்தும் சிம்பு ஏன் பெரிதாய் ஜெயிக்கவில்லை? என்று அவரது குடும்பம் ஜோஸியர் ஒருவரிடம் சென்று கேட்டார்களாம். அதற்கு குருபெயர்ச்சியை ஒட்டி அவருக்கு குட் டைம் ஆரம்பமாகிறது! இனி எங்கேயோ போய்விடுவார்! என்று ஜோஸியர் சொல்லியிருந்தாராம். இந்நிலையில் குருபெயர்ச்சிக்கு சில நாட்கள் முன்னே வெளியான செக்கசிவந்த வானம் ஹிட்டானதில் குடும்பம் செம்ம குஷி.

*    ஆளும் அரசுக்கு எதிராக தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டங்களை நடத்தியது தி.மு.க. இதில் கோயமுத்தூர் மாவட்டத்தில் கலந்து நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட உதயநிதி, மேடையில் பேசுவதற்கு ரொம்பவே திக்கி தடுமாறிவிட்டாராம். மேலும் அவரது மேனரிஸமும் மேடையில் சரியில்லை! என்று விமர்சனங்கள். இது ஸ்டாலினின் கவனத்துக்குப் போக, உதய்க்கு செனடாப் சாலை வீட்டிலேயே மேடை பேச்சில் கவர்வது பற்றி வகுப்புகள் துவங்கியுள்ளது. 

*    சமீபத்தில் டெல்லியிலிருந்து வரும் விமானத்தில் ஒன்றாய் அமர்ந்தபடி வந்த ஆ.ராசா, முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர் ஆகியோர் தீவிர அரசியல் ஆலோசனை நடத்தி சில முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். இரண்டு தரப்புமே தங்கள் தலைவர்கள் கொடுத்த தகவல்களை வைத்து இந்த ஆலோசனையை நடத்தியிருப்பதாக டெல்லிக்கு உளவுத்துறை நோட் வைத்துள்ளது. 

*    கமல் மீது ராகுல் காந்தி ஓவர் ஆர்வம் காட்டுகிறார், திராவிடம் மற்றும் நாத்திகம் பேசுவதால் மு.க.ஸ்டாலினும் கமல் மீது பெரிய குரோதம் காட்டுவதில்லை. எனவே நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இணையலாம்! இதன் மூலம் கமல்ஹாசன் எம்.பி.யாகலாம்! என டெல்லி வரை தகவல்கள் றெக்கையடிக்கின்றன.