அதிமுகவில் முக்கிய பொறுப்புகளை தட்டித்தூக்கிய ஓபிஎஸ்ஸின் தர்மயுத்த தளபதிகள்.. இபிஎஸ்ஸின் மூவ் என்ன.?
2017-ஆம் ஆண்டில் ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவருடன் இருந்த கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு துணைப் பொதுச்செயலாள்ர் பதவிகளை வழங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரானவுடன் கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வரும் நடவடிக்கைகளை எடப்பாடி பழனிச்சாமி தொடங்கியிருக்கிறார். முதல் வேலையாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் வகித்த பொருளாளர் பதவியை திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கி அறிவிப்பு வெளியிட்டார் இபிஎஸ். தற்போது அமைப்புச் செயலாளர்களாக இருந்த சி. பொன்னையன், நத்தம் விசுவநாதன், முன்பு துணை ஒருங்கிணைப்பாளராக இருந்த கே.பி. முனுசாமி உள்ளிட்டோருக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆடியோ ரிலீஸ் மூலம் பரபரப்புக்குள்ளான பொன்னையனுக்கு அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் பதவியையும்; தான் வகித்து வந்த தலைமை நிலைய செயலாளர் பதவியை எஸ்.பி. வேலுமணிக்கு வழங்கியும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பிற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மூத்த நிர்வாகிகள் கட்சியின் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய அம்சம், துணை பொதுச்செயலாளர்களாக கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதுதான். ஜெயலலிதா காலத்தில் நால்வர் அணியில் ஓபிஎஸ்ஸுடன் இணைந்து பணியாற்றியவர்கள்தான் இவர்கள்.
இதையும் படிங்க: பொன்னையன், SP வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு.. பொது.செ ஆனவுடன் EPS அதிரடி .
மிக முக்கியமாக 2017-இல் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போதும், அதன் பிறகான 6 மாதங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக ஓபிஎஸ்ஸுடன் இணைந்து பணியாற்றியதில் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதனும் முக்கியமானவர்கள். தற்போது ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்த நிலையில், இவர்கள் இருவரும் ஓபிஎஸ் பக்கம் நிற்பார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவருமே எடப்பாடி பழனிச்சாமிக்கு தாவி அவருக்குப் பக்க பலமாக இருந்தனர். அதன் அடிப்படையில்தான் தன்னுடைய ஆதரவாளர்களை துணை பொதுச்செயலாளர் பதவிக்கு நியமிக்காமல் இவர்கள் இருவரையும் இபிஎஸ் நியமித்ததாக அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதேபோல தர்மயுத்தம் நடத்தியபோது ஓபிஎஸ் பக்கம் நின்ற பொன்னையனுக்கும் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் ப்தவியை எடப்பாடி பழனிச்சாமி வழங்கியுள்ளார். முன்பு ஒபிஎஸ் பக்கம் நின்றவர்களுக்கு முக்கியமான பதவிகளை வழங்கியிருப்பதன் மூலம், பழைய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அனைவருக்குமான பொதுச்செயலாளராக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி முயற்சியாவும், மேலும் இந்த நகர்வு ஓபிஎஸ் பக்கம் இருக்கும் இன்னும் சிலரை தன் பக்கம் கொண்டு வருவதற்கான இபிஎஸ்ஸின் உத்தியாகவும் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உங்கள் கட்டளையை சிரமேற்று செய்வேன்.. பொது.செ வாக நியமித்த தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி உருக்கமாக நன்றி.
எம்.ஜி.ஆர். காலத்தில் துணை, இணை என பொதுச்செயலாளர் பதவிகள் என எதுவும் கிடையாது. ஆனால், ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளர் ஆன புதிதில் துணை, இணை, இணை துணை பொதுச்செயலாளர் என்றெல்லாம் பதவிகள் உருவாயின. சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சிறைக்கு செல்லும் முன் டி.டி.வி. தினகரனை கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆக்கிவிட்டு சென்றார். அதன் பிறகு பொதுச்செயலாளர் பதவிக்கு மாற்றாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கினைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டதன. தற்போது மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ள நிலையில், பழைய ஃபார்முலாபடி துணைப் பொதுச்செயலாளர்கள் பதவிகள் மீண்டும் உதித்திருக்கின்றன. அந்தப் பதவிகள் முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்தவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி வழங்கி முதல் கட்ட கட்சிப் பணியை கச்சிதமாக முடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: அய்யோ.. எதிர்கட்சி துணை தலைவர் பதவியும் பறிக்க போறாங்க.! சபாநாயகர் அப்பாவுவிடம் கதறிய ஓபிஎஸ்.. பரபரப்பு கடிதம்