உங்கள் கட்டளையை சிரமேற்று செய்வேன்.. பொது.செ வாக நியமித்த தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி உருக்கமாக நன்றி.
கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை நியமித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை நியமித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
நம்மை எல்லாம் ஆளாக்கிய இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் மாபெரும் ஆல விருட்சமாய் வளர்க்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடி நரம்புகளாக, ரத்தத்தின் ரத்தமான ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் எனது இதயமார்ந்த நன்றியை தெரிவித்து வணங்குகிறேன். கழகப் பொன்விழா ஆண்டில் வீறுநடை போடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளராக 11-7-2022 அன்று நடைபெற்ற கழக பொதுக்குழு கூட்டத்தில் என்னை தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
உங்களில் ஒருவனாக கிளைக் கழகச் செயலாளர் பொறுப்பில் தொடங்கி 45 ஆண்டுகளாக பணியாற்றி வரும் என்னை புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்குப் பின் இந்த மாபெரும் பேரியக்கத்திற்கு தலைமை தாங்கி வழி நடத்தும்படி பணித்த உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி தெரிவிப்பதோடு, நீங்கள் இடும் கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். கழகத்தில் பணியாற்றி வரும் மூத்த நிர்வாகிகள் தலைமை கழக செயலாளர்கள்,
மாவட்ட கழக செயலாளர், கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், கழக தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பிற மாநில கழக செயலாளர்கள், பிற மாநில கழக நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூராட்சி பகுதி கழக செயலாளர்கள், கழக சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் சார்பு அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட கழக செயலாளர்கள் உட்பட கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், கோடான கோடி தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் சந்திக்க முடியாத பல அரிய சாதனைகளை புரிந்து பல்வேறு வெற்றிகளையும், விருதுகளையும் பெற்று பெருமைமிகு மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிய பெருமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுகளைச் சாரும். அதேபோல் தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக, தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காகவும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் ஆற்றிய அரும்பணிகள், எடுத்த துணிச்சலான முடிவுகள், உன்னதமான மக்கள் நலப்பணிகள் ஆகிய அனைத்தும் தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.
இத்தகைய பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இந்த இரு பெரும் தலைவர்கள் அமைத்துத் தந்த பாதையில் இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வேன் என்ற உறுதியை உங்களுக்கு நான் அளிக்கிறேன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கும் கழக உடன்பிறப்புகளின் மேன்மைக்கும், தமிழக மக்களின் நல்வாழ்வுக்கும், ஜாதி மத பேதமின்றி விருப்பு வெறுப்புகளுக்கு இடமின்றி என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்காகவே உழைப்பேன் என்று மனதார உறுதி கூறுகிறேன்.
எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும் என்று முதலமைச்சராக தமிழக சட்டமன்றத்தில் நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆற்றிய சிங்க கர்ஜனை உரை நம் செவிகளில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அம்மா அவர்களின் எண்ண ஓட்டத்தை நனவாக்கும் வகையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்திட கடுமையாக உழைப்போம், உழைப்போம்.
இதுவே எனது லட்சியம், இந்த லட்சத்திற்கு நீங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதோடு, தமிழகத்தின் தீய சக்திகள் வேரோடு அழித்து வெகுவிரைவில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் கழக ஆட்சி மீண்டும் வளர்வதற்கு பொன்விழா ஆண்டில் சபதமேற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.