அண்ணா நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கை மற்றும் மாநில சுயாட்சி தீர்மானங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என சட்டபேரவையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் 2வது நாளாக நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி நேரத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்;- "இருமொழி கொள்கை, மாநில சுயாட்சித் தீர்மானங்களைக் கொண்டு வந்து பேரவையில் நிறைவேற்றியவர் பேரறிஞர் அண்ணா. இரு மொழிக்கொள்கை கொண்டு வந்தவுடன் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தவர் அண்ணா. பேரறிஞர் அண்ணா இயற்றிய அனைத்து தீர்மானங்களுக்கும் ஆபத்து வந்துள்ளது. பேரறிஞர் அண்ணாவின் 112- வது பிறந்த நாளில் அவரது தீர்மானங்களைக் காக்க உறுதி ஏற்போம்" என்றார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின்,  கொளத்தூரில் துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி எப்போது முடிவடையும் என்று கேள்வி எழுப்பினார். கொளத்தூர் பகுதியில் நேர்மை நகரில்  33 /11  துணை மின் நிலையத்தை 2010 ஆம் ஆண்டு பணி தொடங்கி 2019ஆம் ஆண்டு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த பணிகள் நிறைவடையவில்லை என்றார். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மூன்று முறை ஆய்வு நடத்தியும் அந்த பணி முடியாமல் உள்ளது என்றார்.