ராமபிரானுக்கு, ' லவ- குச' என்று இரண்டு பிள்ளைகள். சீதாபிராட்டியோடு ராமபிரான் வனவாசம் போன நிலையில் பிள்ளைகள் தவசாலை முனிவரொருவர் பொறுப்பில் வளர்ந்து வந்தனர். சில ஆண்டுகள் இடைவெளியில் ஒருநாள் தந்தையை யாரென்றே அறியாது, பிள்ளைகள் சந்திக்கின்றனர். ஏனோ அந்த சந்திப்பு, மோதலுக்கு வழி வகுத்து விடுகிறது. சகோதரர்களான, லவ -குச இருவரும் ஒன்றாய் ஒரு பக்கம் ஆயுதமேந்த மறுபக்கம் ராமபிரானும் மல்லுக்கு நிற்கிறார். போர் நடக்கிறது, நடக்கிறது, நடந்து கொண்டே இருக்கிறது... யாரும் துவள வில்லை, தோற்கவில்லை ! 

நாள் கணக்கு முடிந்து வாரக்கணக்கில் மாதக்கணக்கில் போகிறது போர். தவசாலையில் பிள்ளைகள் இருவர் குறைவதை 'ஞான'த்தால் உணர்ந்த, வளர்ப்புத் தந்தையான முனிவர், தீவிர முருகனடியாரும் கூட! விஷயத்தை உடனே முருகப்பெருமான் கவனத்துக்கு கொண்டு போக, போர்முனைக்கு மயிலேறி விரைந்தார் முருகப் பெருமான்."ராமரே, நாண் பூட்டுவதை நிறுத்துங்க, உங்களோட சக்தியிலும், என்னோட அருள்பெற்ற முனிவனின் வளர்ப்பிலும் உருவான பிள்ளைங்க கிட்ட தான் இப்ப நீங்க சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க... 

’’போரை நிறுத்தலேன்னா அது இரு தரப்புக்குமே ஆபத்து" என்றதும் தொடுத்த நாண் கீழிறக்கி பெருமானை வணங்கி நின்றார் ராம பிரான். பிள்ளைகள் இருவரும் தந்தையையும் முருகப் பெருமானையும் வணங்கி நின்றனர்... முடிவுக்கு வந்தது போர். சிறார்கள் போர் புரிந்த இடம் என்ற அடையாளம் மெள்ள மெள்ள "சிறுவாபுரி" என்ற ஊரானது. சென்னையை அடுத்த பெரிய பாளையம் சாலையில் உள்ள அந்த " சிறுவாபுரி" ஊரில்தான் சிறுவாபுரி கோயில் இருக்கிறது, அந்த கோயிலுக்குதான் தமிழக துணை முதல்வர், அஇஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் போய் வந்திருக்கிறார்!

 

சிறுவாபுரி கோயிலுக்குப் போய் வழிபட்டு வீடு போல் கற்களை அடுக்கி வைத்து விட்டு வந்தால் வீடு யோகம் கூடிவருமாம்... சிலர் கற்களை 'கோட்டை' போல் அமைத்து வழிபடுவதும் உண்டு. ஓ.பி.எஸுக்கு வீடா பஞ்சம்..?  ’கோட்டை’ அமைத்தல்லவா வழிபட்டிருப்பார்..!