இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு கனிமொழியை அழைத்துச் சென்று திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியிருப்பது திமுகவில் பலரையும் புருவங்களை உயர வைத்துள்ளது.

கலைஞர் மறைவுக்கு பிறகு திமுகவில் கனிமொழியை ஓரங்கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. திமுக மாநிலங்களவை குழு தலைவராக இருந்த கனிமொழியை மக்களவை எம்பியாக்க மக்களவை குழுவின் துணைத் தலைவராக பதவி இறக்கம் செய்தார் ஸ்டாலின். மேலும் திமுக தலைவர் கலைஞர் சிலை திறப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் கூட கனிமொழிக்கு மேடையில் இடம் அளிக்கப்படவில்லை.

 

அதோடு மட்டும் அல்லாமல் தென் சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் டெல்லியில் திமுகவின் முகமாக மாறத் தொடங்கினார். போதாக்குறைக்கு டெல்லி அரசியல் தொடர்புகள் விவகாரத்தை முழுக்க முழுக்க ஸ்டாலின் மருமகன் சபரீசன் பார்க்கத் தொடங்கினார். இப்படி அனைத்து முக்கிய பொறுப்புகளும் கைவிட்டுச் சென்ற நிலையில் நாடாளுமன்றத்தில் பேசுவதோடு கனிமொழி தனது அரசியலை முடித்துக் கொண்டார்.

 

இந்த நிலையில் நேற்று இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் வரிசையாக சென்று அஞ்சலி செலுத்தினர். திமுக தலைவர் ஸ்டாலினும் அஞ்சலி செலுத்த சென்று இருந்தார். ஆனால் அவர் அஞ்சலி செலுத்திய போது அவரது இடதுபுறம் கனிமொழி நின்று கொண்டிருந்தார். இது திமுக நிர்வாகிகள் பலரையும் புருவத்தை உயரச் செய்தது. 

தேவர் நினைவிடத்தில் அஞ்சலி, இமானுவேல் சேகரன் இடத்தின் அஞ்சலி போன்ற விஷயங்கள் எல்லாம் தமிழக அரசியலில் வாக்குவங்கியை தக்க வைக்கும் மிக முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படும். மேலும் தலைவர்கள் சார்ந்த ஜாதியினரை நான் உங்களுடன் இருக்கிறேன் என்று புரிய வைக்க இப்படி ஒரு அஞ்சலி நிகழ்வுகளுக்கு தலைவர்கள் கெத்தாக வருவது வழக்கம். 

இப்படி மிக முக்கியமான நிகழ்வில் ஸ்டாலின் கனிமொழியுடன் கலந்து கொண்டது தான் டால்க் ஆப் த திமுகவாகிவிட்டது. இது குறித்து விசாரித்த போது, என்னவென்று தெரியவில்லை திடீரென கனிமொழியை வரச் சொல்லுங்கள் என்று தளபதி கூறினார், நாங்களும் கூறினோம் அவரும் மகிழ்ச்சியுடன் வந்து சென்றார் என்றார்.