தெலங்கானாவில் தற்போது மூன்றாவது கட்டமாக அமலில் உள்ள ஊரடங்கு, மே 29 வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். 
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 3வது கட்டமாக மே 17 வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதேவேளையில் கொரோனா தொற்று பாதிப்பை பொறுத்து நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன. சிவப்பு மண்டலங்களில் ஊரங்கு தொடரும் என்று அறிவித்த மத்திய அரசு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் சில தளர்வுகளையும் அறிவித்தது. அதன் அடிப்படையில் நாட்டில் பல பகுதிகளில் சற்று இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பியுள்ளனர்.


இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறைவாக இருந்தபோது முழு ஊரடங்கை அறிவித்து வீட்டுக்குள் இருக்க வைத்த அரசுகள், தற்போது பரவல் அதிகரித்துள்ள நிலையில் தளர்வுகள் அறிவித்துள்ளதும் மக்களைக் குழப்பத்தில் தள்ளியுள்ளது. இந்நிலையில், தெலங்கானா முழு ஊரங்கை மே 17-க்கு பிறகு மேலும் 12 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. மே 29 தேதி வரை இது அமலில் இருக்கும் என்று அந்த மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். “கொரோனா தடுப்புக்கு தற்போதுள்ள ஒரே ஆயுதம் ஊரடங்கு மட்டுமே. இரவு நேரத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.