தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு கன்ஃபர்ம்... 7 அல்லது 14 நாட்களுக்கு கடும் ஊரடங்கு..?
தமிழகத்தில் பொது ஊரடங்கு 7 நாட்கள் அல்லது 14 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகியுள்ள நிலையில், மருத்துவ வல்லுனர் குழுவின் பரிந்துரையை ஏற்று மே 10 முதல் 24 வரை பொது ஊரடங்கை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த ஊரடங்கு வரும் திங்கள்கிழமையோடு முடிவடையுன் நிலையில், மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். சென்னையில் நாளை (இன்று) காலை மருத்துவ வல்லுநர்கள் குழு மற்றும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் விவாதித்து உரிய முடிவு அறிவிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து, தற்போது குறைந்துள்ள டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில்கூட இன்னும் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா தொற்று சற்று குறைந்துள்ள கர்நாடகாவிலும் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் தற்போது தமிழகம் முதலிடத்தில் இருந்துவருகிறது. இந்நிலையில் ஊரடங்கை முடிவுக்குக் கொண்டு வருவதோ அல்லது தளர்வு அளிப்பதோ செய்ய முடியாத காரியமாகும். எனவே, இப்போதைய ஊரங்கை நீட்டிக்கவே செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை 7 நாட்களுக்கு, அதாவது மே 31 வரை நீட்டிக்கப்படுமா அல்லது ஜூன் 7 வரை 14 நாட்களுக்கு நீட்டிக்கப்படுமா என்பதுதான் கேள்வி. மேலும் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்திருப்பதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். எனவே, எத்தனை நாட்களுக்கு ஊரடங்கை அமல்படுத்தினாலும், இந்த முறை கடுமையாக அமல்படுத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.